2011-01-01 14:22:47

திருத்தந்தையின் மூவேளை செப உரை.


ஜன 01, 2011. புத்தாண்டு தின திருப்பலியை நிறைவு செய்த பின், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் மற்றும் உல்லாசப் பயணிகளுக்கு நண்பகல் மூவேளை ஜெப உரையும் வழங்கினார் பாப்பிறை.

2011ம் ஆண்டின் இம்முதல் நண்பகல் மூவேளை ஜெப உரையின்போது என் அமைதி தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அன்னை மரியின் பரிந்துரைக்கு அனைவரையும் முன்வைக்கிறேன். இறைவனின் தாயாம் அன்னை மரியின் விழாவான இன்று அவ்வன்னையின் ஆசீரை வேண்டுவோம். நம் அமைதியாயிருக்கும் இயேசு நமக்கு அமைதியையும், பாவ மன்னிப்பையும், உண்மையின் ஒளியையும், அவர் வாழ்வையும், அவர் அன்பையும் வழங்கியுள்ளார். அவர் இவ்வுலகிற்கு அமைதி மற்றும் அன்பின் விதைகளைக் கொணர்ந்தார். அவை வன்முறை மற்றும் தீமைகளின் விதையை விட வலிமை நிறைந்தவை. உலக அமைதி திருநாளான இன்று அன்னை மரியின் திரு உருவின் முன்னால், அமைதியின் கொடைக்கான பரிந்துரையை வேண்டுவோம். இக்காலத்தில் இவ்வமைதியும் மதவிடுதலையும் அதிகம் அதிகமாகத் தேவைப்படுகின்றன. இன்றைய உலகில், மதத்திலிருந்து விலகியிருத்தல், மத அடிப்படைவாதம் என்ற இரண்டு எதிர்மறைப் போக்குகள் உள்ளன. ஆனால் இறைவனோ, அன்பெனும் திட்டம் கொண்டு அனைவரையும் அழைக்கிறார். மத விடுதலை இருக்கும் இடத்திலேயே மனித மாண்பும் முழுமையாக அதன் ஆணிவேரிலிருந்து மதிக்கப்படும். இதனால் மத விடுதலை என்பது அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழியாகும்.

அன்னை மரியின் கைகளில் இருக்கும் அமைதியின் இளவரசராம் இயேசுவை நோக்குவோம். அமைதி என்பது ஆயுதங்கள் வழியாகவோ, அரசியல், பொருளாதார, மற்றும் கலாச்சார அதிகாரங்கள் வழியாகவோக் கிட்டுவதில்லை. மாறாக, உண்மைக்கும் அன்புக்கும் தன்னைத் திறக்கும் மனச்சான்றின் பணிகள் மூலம் கிட்டுவது என்பதை உணர்வோம். இந்தப் பாதையில் இப்புத்தாண்டில் நாம் நடைபோட இறைவன் உதவுவாராக. இவ்வாறு தன் மூவேளை ஜெப உரையை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் ஆசீரையும் வழங்கினார்.

வன்முறைகளும் மோதல்களும் ஒழிந்து, உலகம் முழுவதும் அமைதி நிலவ இறைவனை வேண்டுவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்து தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.