2010-12-30 14:52:04

கருவில் வளரும் உயிர்களைக் காப்பாற்ற Chile நாட்டு ஆயர்கள் விடுத்துள்ள அழைப்பு


டிச.30, 2010. கருவில் வளரும் உயிர்களைக் காப்பாற்றும் வகையில், கருவுறும் ஒவ்வொரு தாயும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றும் Chile நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இச்செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட மாசில்லாக் குழந்தைகள் திருவிழாவையொட்டி, தென் அமெரிக்காவில் உள்ள Chile ஆயர்கள் 'மாசில்லா உயிர்களுக்கான கண்ணீர்' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

12 அம்சங்கள் அடங்கிய இந்த அறிக்கையில் கருவில் வளரும் உயிர்கள் குறித்த திருச்சபையின் கோட்பாடுகளை மக்களும், அரசியல் தலைவர்களும் உணர வேண்டுமென்று ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Chile நாட்டின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் வகையில் இந்த அறிக்கை கிறிஸ்மஸ் காலத்தில் அனுப்பப்பட்டுள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் சக்தி குறைந்தவர்களை நாம் எவ்விதம் நடத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அந்நாட்டின் முன்னேற்றமும் அளக்கப்படவேண்டும் என்று ஆயர்கள் இவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

வலுவற்றவர்களாய் இருக்கும் குழந்தைகளையும், முதியோரையும் சமுதாயத்தில் இருந்து அகற்றிவிட முடிவு செய்வது தவறான பாதையில் நம்மை நடத்திச்செல்லும் என்று கூறும் ஆயர்கள், இறைவனே வலுவற்ற ஒரு குழந்தையாய் வந்திருக்கும் கிறிஸ்மஸ் காலத்தில் இந்த உண்மையை நாம் உணர்வது நன்மை பயக்கும் என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆயர்களின் இந்த அறிக்கையை Chile ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Ricardo Ezzatiயும், பேரவைச் செயலர் ஆயர் Santiago Silvaவும் நிருபர்கள் கூட்டத்தில் வெளியிட்டனர்.








All the contents on this site are copyrighted ©.