2010-12-29 15:07:19

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


டிச 29, 2010. உலகம் முழுமையும் இன்று குளிரால் நடுங்கிகொண்டிருக்கிறது. காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஏரி கூட உறைந்து போய் மக்கள் அதன் மீது நடந்து போகும் அளவிற்கு பனி நிலமாய் உள்ளது. இந்நிலையில் உரோம் நகரமும் குளிரை அனுபவித்துக் கொண்டிருக்க, திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஞானத்திலும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கிய பெண்மணியான 15ம் நூற்றாண்டின் ஏழை கிளாரா சபை மடஅதிபராக இருந்த இத்தாலியின் பொலோஞ்ஞாவின் புனித காத்ரீன் குறித்து தன் சிந்தனைகளை வழங்கினார்.

பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்த புனித காத்ரீன், தன் குழந்தைப் பருவத்தை ஃபெராரா அரசவையில் செலவிட்டார். பொது வாழ்விற்கெனத் தன்னை அர்ப்பணித்த ஏனைய சில பெண்களோடு தன் 14ம் வயதில் இணைந்த இவர், பின்னர் ஏழை கிளாரா சபை உறுப்பினரானார். ஆன்மீகப் பயணத்தில் இவர் தன் ஆன்மாவின் இருண்ட வேளைகளை நிறையச் சந்தித்தார். சந்தேகங்களையும் சோதனைகளையும் சந்தித்தாலும்,பெரும் ஆறுதலையும் பெற்றிருந்தார் அவர். 'ஏழு ஆன்மீக ஆயுதங்கள்' என்ற குறிப்பேட்டில், தான் பெற்ற பல அருள் வரங்கள் பற்றிக் குறிப்பிடும் அவர், தீயோனின் சோதனைகளை எதிர்கொண்டு வெற்றியடைவதற்கானப் பலன் தரும் வழிகளின் பட்டியலையும் தந்துள்ளார். இறைவனின் இறுதித் தீர்ப்பின் தீவிரத்தையும், அதே கடவுளின் முடிவற்ற இரக்கத்தையும் புரிந்து கொள்ள, தான் கண்ட இறைக் காட்சிகள் எவ்வாறு வழிநடத்திச் சென்றன என்பதையும் விளக்கியுள்ளார். காத்ரீனின் வாழ்வு முழுமையும் தாழ்ச்சி மற்றும் கீழ்ப்படிதலின் எடுத்துக்காட்டாய் இருந்தது. அனைத்து நற்குணங்களையும் அழித்துவிடும் ஆன்மீகத் தற்பெருமையை அனைத்துக் கீழ்ப்படியாமைகளின் அடையாளமாகக் கண்டார் புனித காத்ரீன். நம் வாழ்விற்கான இறைத்திட்டத்திற்கு விசுவாசமாக இருப்பதற்கான நம் தினசரி முயற்சிகளில், இறை விருப்பத்திற்கு தாழ்ச்சியுடன் கீழ்ப்படிய பொலோஞ்ஞாவின் புனித காத்ரீனின் ஜெபங்களும் எடுத்துக்காட்டும் நம்மைத் தூண்டுவதாக. இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.