2010-12-29 15:08:40

டிசம்பர் 30. – நாளும் ஒரு நல்லெண்ணம்


இவ்வாறு நடக்காமல் இருந்திருக்கலாம், அவ்வாறு நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று மனம் அவ்வப்போது அலை பாயும், விருப்பம் கொள்ளும். ஆனால் உண்மை எப்பொழுதும் யாரும் எதிர்பாராததாக இருந்து கொண்டிருக்கிறது.

பழையன கழிதலில், நாம் விரும்பாதவை நம்மைத் தொடரக்கூடாது என்று விரும்புகிறோம், பிரார்த்திக்கிறோம், ஆழ்ந்து நம்புகிறோம். அந்த நம்பிக்கை முன்னகர்வதற்கானத் தெம்பைத் தருகிறது. அந்தத் தெம்பில் மகிழ்ச்சிக்கானத் தேடல்பயணம் தொடர்கிறது. துவண்டுவிடாத தேடல்தானே வாழ்க்கையின் மையப்புள்ளி.

நம் வாழ்க்கைப் பாதைகள் யாவும் கொடியதும்,நெடியதுமான துயரங்களைச் சுமந்து வந்த வரலாறுகளாய்ச் சில வேளைகளில் தோன்றலாம்.

கடந்து போன காயங்களின் வடுக்களை இன்னும் நாம் சுமந்து நிற்கலாம்.

ஆனால், இதுவரை பட்ட துயரங்களும், விட்ட கண்ணீரும், இழந்த இழப்புக்களும், அடைந்த அவலங்களும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் என்று யாரும் நம்புவதுமில்லை, விரும்புவதுமில்லை.

அனுபவங்களின் கருப்பையில் இருந்துதானே புதிய புதிய வழிமுறைகளும், சிந்தனைகளும் பிறப்பெடுக்கின்றன. தோற்றுப்போன வழிமுறைகளில் இருந்து கற்றுக் கொண்டு, அனுபவங்களை படிப்பினைகளாக ஏற்றுக்கொண்டு நடைமுறைக்கு இயைந்த வழிமுறை நோக்கிச் செல்வதால் மட்டுமே நாம் தேடிக்கொண்டிருக்கும் இலட்சியக் கனவுகளை எட்ட முடியும்.

மாறி வரும் உலகில் மாற்றங்கள் நிகழும் என்று நாமும் நம்பிக்கை கொண்டு, முன்னோக்கி அடி எடுத்து வைத்தால், புதிய வாழ்வு ஆரம்பமாகும்.








All the contents on this site are copyrighted ©.