2010-12-27 15:01:55

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை ஜெப உரை.


டிச 27, 2010. இயேசு பிறப்பு விழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறைத் திருக்குடும்ப திருவிழாவாக திருச்சபை சிறப்பித்து வருவதையொட்டி இஞ்ஞாயிறன்று குடும்பங்களின் மேன்மை மற்றும் முக்கியத்துவம் குறித்து மூவேளை ஜெப உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். மாடடைக் குடிலில் பிறந்த உயிர்துடிப்புடைய ஒளியானது ஆழமான மறையுண்மையைப் பிரதிபலித்து நிற்பதையும் அதனைப்பெற்ற அன்னை மரியாவும் யோசேப்பும் தங்கள் வழி அம்மறையுண்மையை மற்றவர்களுக்கு வழங்கியதையும் பற்றி குறிப்பிட்ட பாப்பிறை, இம்மறையுண்மையின் ஒருபகுதியை ஒவ்வொரு குழந்தையும் தன் பிறப்பின்போது கொண்டுவருகிறது என்றார். இறைவனின் கொடையாயிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனக்கென ஒரு தாயையும் ஒரு தந்தையும் கொண்டிருக்க உரிமையுடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதையும் வலியுறுத்தி சுட்டிக்காட்டினார் அவர். இறை மாட்சியின் அடையாளமாய் வரும் குழந்தைகள் ஒவ்வொன்றிற்கும் தாய் மற்றும் தந்தையின் அன்பு தேவைப்படுகிறது மற்றும் அவைகள் குடும்பத்தின் ஓர் அங்கமாக வாழவேண்டியவர்கள் எனவும் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்மஸ் காலத்தின் போது, உலகின் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டது குறித்த தன் கண்டனத்தையும் தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையின் இறுதியில் வெளியிட்டார் திருத்தந்தை.

நைஜீரியா மற்றும் பிலிப்பீன்ஸில் கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தானில் உலக உணவு திட்ட அலுவலகம் ஒன்று தாக்கப்பட்டது போன்றவை குறித்த தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட பாப்பிறை, இவைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிறப்புச் செபங்களுக்கும் உறுதி கூறினார். இத்தகைய வன்முறை பாதைகள் கைவிடப்பட்டு, அமைதித் தீர்வுகள் தேடப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

தென் பிலிப்பீன்ஸில் கிறிஸ்மஸ் திருப்பலியின் போது நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ஒரு குருவும் 10 விசுவாசிகளும் காயமடைந்தனர். வட நைஜீரியாவின் இரு கிறிஸ்தவ கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் உலக உணவு திட்ட கிடங்கின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதல்கள் குறித்து தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையின் போது தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.