2010-12-27 15:07:17

கிறிஸ்துவின் பிறப்பு நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் : வாழ்வு மதிப்பீடுகள் மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவம்


டிச 27, 2010. வாழ்வு மதிப்பீடுகள் மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவம் உட்பட எண்ணற்ற பாடங்களைக் கிறிஸ்துவின் பிறப்பு நமக்குக் கற்றுத் தருகிறது என்றார் எருசலேமின் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாச் சிறப்புச்செய்தியில் இதனைக் குறிப்பிட்ட முதுபெரும் தலைவர், கிறிஸ்மஸ் என்பது புனித பூமியின் அனைத்து மக்களுக்கும், அமைதியையும் ஒப்புரவையும் கொணர்வோருக்கும் ஒரு மாபெரும் விழா என்றார்.

அதிகாரத்திற்கான விருப்பமும் வன்முறையும் நிறைந்துள்ள இவ்வுலகில் கிறிஸ்துவின் பிறப்பு மாடடைக்குடிலில் இடம்பெற்றது, நமக்கு எளிமையையும், குற்றமற்ற நிலையையும், தாழ்ச்சியையும் கற்றுத்தருவதாக உள்ளது எனவும் கூறினார் பேராயர் Twal.

குடும்பத்தில் காணப்படும் அன்பு மற்றும் அமைதி மூலம், சமூகம் முழுமையும் பலன் பெறுகிறது என்ற அவர், நாசரேத் திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இவ்வுலகில் ஒவ்வோர் ஆண்டும் பல இலட்சக்கணக்கான கருக்கலைத்தல்கள், சுயநலங்களாலும், கடின இதயங்களாலும், அறியாமையாலும், வாழ்வை ஏற்பதற்கான தயார்நிலை இன்மையாலும், கருவிலேயே வாழ்வை மறுப்பதாலும் இடம்பெறுவது குறித்த கவலையை வெளியிட்ட முதுபெரும் தலைவர் Twal, ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட மாண்பு என்பது உள்ளது, ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் கொடை என்பதை வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.