2010-12-27 15:04:33

இயேசுவின் கேலிச்சித்திரம் அடங்கிய கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை குறித்து ஒரிசா கிறிஸ்தவர்கள் கண்டனம்


டிச 27, 2010. ஒரிசா சட்டமன்ற அங்கத்தினர் ஒருவர் வெளியிட்டுள்ள இயேசுவின் கேலிச்சித்திரம் அடங்கிய கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அம்மாநில கிறிஸ்தவர்கள்.

ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தள் என்பதைச் சேர்ந்த சட்டமன்ற அங்கத்தினர் மனோகர் இரந்தரி என்பவர் தயாரித்துள்ள கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையில் இயேசு கிறிஸ்து ஒரு கையில் சிகரட்டையும் மறு கையில் பீர் கலனையும் வைத்திருப்பதாக கேலிச்சித்திரம் காணப்படுகிறது.

இது குறித்து கண்டனத்தை வெளியிட்ட பெர்ஹாம்பூர் ஆயர், இத்தகைய கேலிச்சித்திரங்கள் கிறிஸ்மஸ் குறித்த சிலரின் அறியாமையைக் காட்டுகிறது என்றார். மற்ற மதத்தவர்களின் மனங்களைப் புண்படுத்தாமல் இருப்பதற்கு முதலில் அம்மதங்களின் அடையாளச் சின்னங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்றார் ஆயர்.

ஒரிசாவின் நவரங்பூர் மாவட்ட கிறிஸ்தவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கிறிஸ்துமஸ் நாளன்று சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இத்தகையை எதிர்ப்புப் போராட்டங்களைக் கைவிடுமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஒரிசா கிறிஸ்தவர்களின் பரவலான எதிர்ப்பைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் இரந்தரி, கிறிஸ்தவர்களின் மன்னிப்பை வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.