2010-12-27 14:49:26

2010 கடந்து வந்த பாதை


டிச.27,2010. உலகில் பெரும்பாலான மக்கள் கி.பி. 2010லிருந்து 2011க்குள் நுழையத் தயாராகி வருகிறார்கள். தமிழ் திருவள்ளுவர் ஆண்டு 2042 ம் பிறக்கவிருக்கின்றது. தைமாதமும், தமிழ்ப் புத்தாண்டும், பொங்கலும் தொடர்கின்றன. இந்த வேளையில், “இந்த ஆண்டு இப்பதான் பிறந்தது மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள முடியப் போகுது. ஓராண்டு என்ன வேகமா ஓடிப் போயிருச்சு.... என்று பெருமைப்படும் குரல்களையும், அப்பாடா... இந்தப் புதிய ஆண்டாச்சும் நல்ல ஆண்டாக இருக்காதா”...என்ற ஏக்க ஒலிகளையும் மிகச் சாதாரணமாக இந்த டிசம்பர் இறுதி நாட்களில் கேட்க முடிகின்றது. ஓர் ஆண்டு பிரியாவிடைக் கொடுத்துச் செல்லும் போது அதனைத் தனி நபர் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள்வரைச் சீர்தூக்கிப் பார்த்துப் புதிய ஆண்டிற்குத் திட்டம் வகுக்கின்றனர். இது நல்லதும்கூட. ஊடகங்களும் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் இறுதி நாட்களில் கடந்து சென்ற, ஆண்டு அலசல்களைத் தவறாமல் வெளியிட்டு வருகின்றன. இந்த வேளையில் அன்பர்களே, நாமும் 2010ஐ அலசுவோமா! வத்திக்கான் வானொலி கத்தோலிக்கத் திருச்சபையின் குரல் என்பதால் முதலில் அங்கிருந்து ஆரம்பிக்கிறோம்.

இந்த 2010ம் ஆண்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருச்சபைக்கு உள்ளேயும் திருச்சபைக்கு வெளியேயும் கடும் சவால்களை எதிர் கொண்டார். 83 வயதாகும் திருத்தந்தை கடந்த 12 மாதங்களில் ஐந்து வெளிநாட்டுத் திருப்பயணங்களை மேற்கொண்டார். விவிலியம் மற்றும் புதிய நற்செய்திப் பணி குறித்த ஏடுகளை வெளியிட்டார். புதிய நற்செய்திப் பணியை ஊக்குவிப்பதற்கான திருப்பீட அவை ஒன்றையும் இவ்வாண்டு ஜூனில் உருவாக்கினார். அத்துடன் 2012ம் ஆண்டில் நடைபெறவிருக்கின்ற உலக ஆயர் மாமன்றத்துக்கு “புதிய நற்செய்திப்பணி” என்பதையே தலைப்பாகவும் திருத்தந்தை அறிவித்தார். ஒரு நேர்காணலில் திருத்தந்தை தெரிவித்தப் பல கருத்துக்கள் புத்தக வடிவில் வெளியானது. இவ்வாண்டில் திருத்தந்தை ஆறு பேரைப் புனிதர்களாக அறிவித்தார். 24 பேரை கர்தினால்களாக உயர்த்தினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட திருவழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதேசமயம் திருச்சபையில் சில குருக்களின் தவறானப் பாலியல் நடத்தைகளால் கடும் எதிர்ப்புக்களையும் அவர் சந்தித்தார். ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வன்முறைக்கு உள்ளாகும் சிறுபான்மைக் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு சர்வதேச சமுதாயத்துக்கும் பலமுறை அழைப்பு விடுத்தார். இந்த ஞாயிறு மூவேளை செப உரையில்கூட பாகிஸ்தான், நைஜீரியா, பிலிப்பைன்ஸ் உட்பட்ட பல பகுதிகளில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைத் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தார். மொத்தத்தில் 2010ல் உலகில் அமைதிக்கும் ஒப்புரவுக்கும் உரையாடலுக்குமென அடிக்கடி அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

RealAudioMP3 010ல் உலகில் சாதனைகள் என்று சொல்லும் போது, ஆசிய-பசிபிக் பகுதி ஏற்றுமதியிலும் இறக்குமதியிலும் சுமார் இருபது விழுக்காட்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஏற்றுமதி 19.3 விழுக்காடும், இறக்குமதி 20.2 விழுக்காடும் ஆகும். 2011ம் ஆண்டிலும் இப்பகுதியின் ஏற்றுமதி 10.5 விழுக்காடு அதிகரிக்கும் எனவும், இதில் சீனா, இந்தியா துருக்கி, மலேசியா என்ற வரிசையில் நாடுகள் முன்னணியில் நிற்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. சீனா, 5,000 கோடி டாலர் அளவில் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கிறது. மியான்மாரில் ஜனநாயக ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சு கி வீட்டுக் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தென்னாப்ரிக்கா, உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அசத்தலாக நடத்தி உலகின் பார்வையை வசப்படுத்தியது. இதனால் அந்நாட்டுச் சுற்றுலாத் துறைக்கு மட்டும் கிடைத்த வருவாய் 52 கோடி டாலர்.

2010, ஆகஸ்டில் தென் அமெரிக்க நாடான சிலேயில் பூமிக்கடியில் சிக்கிய 33 சுரங்கத் தொழிலாளர்கள் 69 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டது உலக மக்களைச் சிலிர்க்க வைத்த நிகழ்வாகும்.

ஆப்ரிக்க நாடான சூடானில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாகப் பலகட்சிகள் கொண்ட தேர்தல் இந்த ஜனவரியில் நடைபெறவுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடும் இரஷ்யாவும் பிராக் நகரில் புதிய ஆயுதக் குறைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 189 உறுப்பு நாடுகள் அணுப் பரவல் தடை ஒப்பந்தத்தைச் செயல்படுத்த சிறிய நடவடிக்கைகள் எடுக்க இசைவு தெரிவித்துள்ளன. ஐ.நாவும் தனது அனைத்துலக அணுசக்தி நிறுவனத்தின் மூலம் உலக அளவில் அனைத்து அணுப் பரிசோதனைகளையும் தடை செய்ய முயற்சித்து வருகிறது. இந்த டிசம்பர் தொடக்கத்தில் மெக்சிகோவின் கான்குன் நகரில் நடைபெற்ற வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா. கருத்தரங்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. சர்வதேச பல்லின உயிர் வகை ஆண்டான இந்த 2010ல், ஜப்பானின் நகோயாவில் கூடிய 193 நாடுகளின் பிரதிநிதிகள் உலகின் உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்றவும் அதன் மூலம் உலகின் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு உதவவும் உறுதி பூண்டனர்.

2015ம் ஆண்டுக்குள் உலகின் ஏழ்மையைப் பாதியாகக் குறைப்பது குறித்த மில்லேன்ய வளர்ச்சித்திட்ட இலக்கை அடைவதற்கு நாடுகளின் தலைவர்கள் இந்த 2010ல் நம்பிக்கை கொடுத்துள்ளனர். இந்த இலக்கு தொடங்கப்பட்ட இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து இதில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என்று ஐ.நா.பொதுச் செயலர் கூறியிருக்கிறார். ஐந்து வயதுக்குட்டபட்ட 30 இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் ஆண்டு தோறும் காப்பாற்றப்பட்டுள்ளனர். வளரும் நாடுகளில் 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளைப் பெற வாய்ப்புக் கிடைத்துள்ளது. பள்ளிக்குச் செல்லும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பிரசவத்தின் போது இறக்கும் தாய்மாரின் எண்ணிக்கைக் கடந்த பத்தாண்டுகளில் முதன் முறையாகக் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. எனினும் நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் இன்னும் பசியால் வாடுகின்றனர். இது புதிய ஆண்டில் உலகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று.

இந்த 2010ம் ஆண்டில், நாடுகளின் சாதனைகள் இன்னும் உள்ளன. அதேசமயம் வேதனைகள் என்று பார்த்தால், 2010ல் மட்டும் இயற்கையின் கோரத் தாண்டவங்கள் உலக அளவில் பல இலட்ச உயிர்களைக் காவு கொண்டிருக்கின்றன. மேலும், இந்த இயற்கைப் பேரிடர்களால் 22 ஆயிரத்து 20 கோடி டாலர் அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் மெக்சிகோ வளைகுடாவில் பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அதில் சுமார் 17 கோடி காலன்கள் எண்ணெய்க் கசிந்து கடலில் மிதந்தது. இந்தக் கசிவினால் ஏற்பட்டச் சுற்றுச்சூழல் பாதிப்பு முற்றிலும் குறைவதற்கு மேலும் பல ஆண்டுகள் எடுக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளார்கள்.

கரீபியன் நாடாகிய ஹெய்ட்டி, நிலநடுக்கம், வெள்ளம், காலரா போன்ற கடும் பேரிடர்களை எதிர் நோக்கியிருக்கிறது. வரலாற்றில் ஆட்சேதத்தை அதிகம் ஏற்படுத்திய நிலநடுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹெய்ட்டி நிலநடுக்கத்தில் சுமார் மூன்று இலட்சம் பேர் இறந்தனர். அந்நாட்டில் காலராவினால் 2,100பேர் இறந்தனர் மற்றும் ஐம்பதாயிரத்துக்கு அதிகமானோர் அதனால் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாண்டில் பாகிஸ்தானிலும் கடும் வெள்ளம். ஒரு கட்டத்தில் நாட்டின் ஐந்தில் ஒரு பகுதி தண்ணீரால் நிரம்பியிருந்தது. இதில் சுமார் 25 இலட்சம் வீடுகள் அழிந்தன.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் ஏற்பட்ட கடும் வறட்சியினால் அந்நாட்டின் சுமார் பாதிப் பேர் அதாவது எழுபது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் விளைச்சலையும் வீட்டு விலங்குகளையும் இழந்தனர். சுமார் 80 விழுக்காட்டு நைஜர் சிறார் ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் எழுபது நாடுகளின் பிரதிநிதிகள் கூடி அந்நாட்டின் அமைதிக்கும் ஒப்புரவுக்கும் வழி அமைக்கும் அரசியல் தீர்வுக்கு இந்த 2010ல் இசைவு தெரிவித்தார்கள். ஆனால் அந்நாட்டில் தற்சமயம் தாக்குதல்கள் அதிகரித்து கடும் பதட்ட நிலையிலேயே நாடு இருக்கின்றது. தலிபான்களின் கடும் மிரட்டல்களைப் புறம் தள்ளி 40 இலட்சத்துக்கு மேற்பட்ட ஆப்கான் மக்கள் கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்தார்கள்.

அண்மை நாட்களாக உலக நாடுகளை விக்கித் திணற வைத்த விக்கிலீக்ஸ் குறித்து இந்நிகழ்ச்சியில் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆப்கான், ஈராக் போர் மற்றும் அமெரிக்கத் தூதரக இரகசியங்களைக் கசியவிட்டு உலகின் எல்லா ஊடகங்களுக்கும் விக்கிலீக்ஸ் தீனி போட்டுள்ளது. ஆனாலும் அமெரிக்காவால், இந்த விக்கிலீசுக்குப் பெரிய அளவில் நன்கொடைகள் கிடைக்க விடாமல் தடுக்க மட்டுமே முடிந்துள்ளது. மேலும், "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை பதிப்பித்து வெளியிட பதிப்பகங்களுடன் ஏழு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அன்பர்களே, நாட்டில் எது நடந்தாலும் அதற்கும் எனக்கும் தொடர்பில்லை என்பது போல் பல எளிய மக்களின் வாழ்க்கைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த மக்களுக்குக் கை கொடுப்பது நம்பிக்கை ஒன்றே. நீண்ட காலப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் இன்றைய நிலை பற்றிப் பேசிய மன்னார் குருகுல அதிபர் அருட்திரு சூசை அவர்களும், எது நடந்திருந்தாலும் எம் மக்கள் கடவுள் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை என்றுதான் நம்மிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

RealAudioMP3 அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஹெய்ட்டி மக்களின் புனர்வாழ்வுப் பணிகளுக்கானச் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக ஐ.நா.வால் நியமிக்கப்பட்டவர். இவர் பாதிக்கப்பட்ட அம்மக்களைப் பார்த்த பின்னர் சொன்னார் - இவ்வளவு கொடூரமான நிகழ்வுக்கு மத்தியிலும் இந்த மக்கள் தங்களது எதிர்காலத்தை எவ்வளவு ஆர்வமாய்க் கற்பனை செய்கிறார்கள் என்று.

RealAudioMP3 ஒரு தமிழ் எழுத்தாளர் சொன்னார் - முடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது. பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்...என்று.

ஆம் அன்பர்களே! கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பது போல, “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் அது ஓடுவதில்லை, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும். நாளையப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடுவதே நமக்கு நன்மை பயக்கும். திருத்தந்தை 16ம் பெனடிக்டும் கடவுளில் நம்பிக்கை வைப்பது வாழ்வை நன்னெறியில் நடத்திச் செல்லும், கடவுள் நமக்குத் தொலைவில் இல்லை என்பதையே கிறிஸ்மஸ் நமக்கு உணர்த்துகின்றது என்று சொல்கிறார். ஆதலால் வானொலி அன்பர்களே, வாழ்க்கையில் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். 2011ம் புதிய ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவோம்.

நம்பிக்கையான வாழ்வை நினைத்தால் அதுவாகவே நாம் ஆகிறோம். கடலைக் கடக்க விரும்பும் நம்மிடம் இரும்பைப் போன்ற மனஉறுதி தேவை. மலைகளைத் துளைத்துச் செல்ல விரும்பும் நம்மிடம் போதுமான மனவலிமை தேவை.








All the contents on this site are copyrighted ©.