2010-12-25 13:57:31

திருத்தந்தையின் URBI ET ORBI எனும் ஊருக்கும் உலகுக்குமான வாழ்த்துச்செய்தி


டிச.25, 2010. "Verbum caro factum est" "வார்த்தை மனுவுருவானார்".
உரோம் நகரிலும் உலகம் முழுமையிலும் எனக்குச் செவிமடுத்துக்கொண்டிருக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! நான் கிறிஸ்து பிறப்புச் செய்தியை மகிழ்வுடன் அறிவிக்கிறேன்: கடவுள் மனிதனானார், நம்மிடையே குடிகொண்டார். கடவுள் தூரமாக இல்லை: அவர்தான் இம்மானுவேல், கடவுள் நம்மோடு. அவர் அந்நியர் அல்ல: அவருக்கு முகம் உண்டு, அதுவே இயேசுவின் முகம்.

இச்செய்தியானது எப்போதும் புதியது, எப்போதும் ஆச்சரியம் தருவது, ஏனெனில் இது நம் மிகப்பெரும் நம்பிக்கையையும் தாண்டியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு வெறும் அறிவிப்பல்ல, இது ஒரு நிகழ்வு, நடந்து கொண்டிருப்பது. இதனை நம்பிக்கைக்குரிய சாட்சிகள் கண்டனர், கேட்டனர், நசரேத்தூர் இயேசு எனும் மனவுருவை தொட்டு உணர்ந்தனர். அவரோடிருந்து, அவர் செயலை நோக்கி, அவர் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து, இயேசுவில் மெசியாவைக் கண்டுகொண்டனர். சிலுவையில் அறையப்பட்ட பின், அவர் உயிர்த்ததைக் கண்ணுற்று, அவர்கள் உறுதியாக நம்பினார்கள் அவர் உண்மை மனிதராகவும் உண்மைக் கடவுளாகவும், தந்தையிடமிருந்து இறங்கி வந்த ஒரே மகனாகவும், அருளும் உண்மையும் நிறைந்து விளங்கினார் என்று.

"கடவுள் மனுவுருவானார்". இந்த வெளிப்பாடுகளின் முன்னால் நாம் மீண்டும் ஒருமுறை ஆச்சரியம் கொள்கிறோம்: இது எவ்வாறு இயலும் என்று. வார்த்தையும் உடலும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் உண்மை நிலைகள். முடிவற்ற, அனைத்து வல்லமையும் பொருந்திய வார்த்தை எவ்விதம் பலமற்ற மரணத்தைத் தழுவும் மனிதனாக மாறமுடியும்? இதற்கு ஒரு பதிலே உண்டு. அதுவே அன்பு. அன்பு கூர்வோர், தாங்கள் அன்புகொள்பவரோடு பகிர விரும்புகின்றனர், அன்புகூர்வோரோடு ஒன்றித்திருக்க ஆவல் கொள்கின்றனர். புனித விவிலியமும் இறைவனின் அன்பு வரலாற்றை நமக்குக் காட்டுகிறது. அதுவே இயேசுவில் உச்சத்தை எட்டியது.

கடவுள் உண்மையில் மாறுவதில்லை; அவர் தனக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார். இவ்வுலகைப் படைத்த அவரே ஆபிரகாமை அழைத்தவர் மற்றும் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தியவர்: இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே... ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்... இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்: சினம் கொள்ளத் தயங்குபவர்: பேரன்பு மிக்கவர்: நம்பிக்கைக்குரியவர். (விடுதலைப்பயண நூல் 3:14-15; 34:6). கடவுள் மாறுவதில்லை; அவரே அன்பு, இப்போதும் எப்போதும். தன்னிலையில் அவர் ஒன்றிப்பானவர், மூவொரு கடவுளில் ஒன்றிணைந்தவர், அவரின் வார்த்தைகளும் செயற்பாடுகளும் ஒன்றிப்பை நோக்கி உள்ளன. மனுவுரு என்பது படைப்பின் மணிமகுடம். மனுவுரு எடுத்த இறைமகனாம் இயேசு அன்னைமரியின் உதரத்தில் இறைதந்தையின் விருப்பத்தாலும் தூய ஆவியின் செயலாலும் உருவெடுத்தபோது, படைப்பு என்பது தன் உச்சநிலையை எட்டியது. அகில உலகத்தின் ஒழுங்கமைவின் கூறாகிய வார்த்தை, உலகில் குடிகொள்ளத்துவங்கியது குறிப்பிட்ட காலத்தில், இடத்தில்.

"வார்த்தை மனுவானார்". இவ்வுண்மையின் ஒளி இதனை விசுவாசமுடன் பெறுபவருக்கு வெளிப்படுத்தப்படுகிறது, எனெனில் இது அன்பின் மறையுண்மை. அன்பிற்குத் தன்னை திறப்பவர்கள் மட்டுமே கிறிஸ்மஸ் ஒளியால் சூழப்படுகிறார்கள். இது பெத்லகேமின் அந்த இரவின் மற்றும் இன்றைய நிகழ்வு. இறைமகன் மனுவுரு எடுத்த நிகழ்வு, வரலாற்றிற்குள் இடம்பெற்றது, அதேவேளை வரலாற்றைத் தாண்டியதாகவும் இருந்தது. உலகின் அந்த இரவில் ஒரு புதிய ஒளி தூண்டப்பட்டது, அவ்வொளி விசுவாசத்தின் எளிமையான கண்கள் கண்டுகொள்ளவும், எளிய, தாழ்ச்சியான இதயத்தைக் கொண்டு மீட்பருக்காகக் காத்திருப்போர் உணரவும் தன்னை அனுமதிப்பதாக இருந்தது. உண்மை என்பது வெறும் கணித முறையாக இருப்பின், ஒரு நிலையில் அது தன் வல்லமை கொண்டே தன்னைத் திணிப்பதாக இருக்கும். ஆனால், உண்மை என்பது அன்பென்றால், அது விசுவாசத்திற்கும், நம் இதயங்களின் 'ஆம்' என்பதற்கும் அழைப்பு விடுக்கும்.

அன்பு என்பதாகவும் இருக்கும் உண்மையை அன்றி நம் இதயங்கள் உண்மையாக எதைத் தேடுகின்றன? குழந்தைகள் தங்கள் எளிமையான, சிந்தனையைத் தூண்டும் கேள்விகளுடன் இதனைத் தேடுகின்றனர். இளைஞர்களோ தங்கள் வாழ்வின் ஆழமான அர்த்தத்தைக் கண்டுகொள்ள, ஆர்வத்தோடு இதனைத் தேடுகின்றனர். தங்கள் குடும்பத்தின் மற்றும் பணியிடங்களின் அர்ப்பணங்களை ஏற்று நடத்தவும், வழிகாட்டுதல் பெறவும் வயதுவந்தோர் இதனைத் தேடுகின்றனர். தங்கள் இவ்வுலக வாழ்வின் முழுமையை அடைவதற்கு முதியோர் இதனைத் தேடுகின்றனர்.

"வார்த்தை மனுவுருவானார்". கிறிஸ்மஸின் இவ்வறிவிப்பானது அனைத்து மக்களுக்குமான ஒளியுமாகும். இது மனிதகுலத்தின் ஒன்றிணைந்த பயணத்திற்கானது. "இம்மானுவேல், கடவுள் நம்மோடு" என்பவர் நீதி மற்றும் அமைதியின் மனிதராக வந்துள்ளார். அவரது அரசு இவ்வுலகைச் சார்ந்தது இல்லை என நமக்குத் தெரியும். இருப்பினும், அது இவ்வுலகின் அனைத்து அரசுகளையும்விட அதிமுக்கியத்துவம் நிறைந்தது. இது மனித குலத்தின் புளிக்காரமாய் உள்ளது. இது குறைவுபட்டால், உண்மை வளர்ச்சிக்கான சக்தி குறைவு படும். பொது நலனுக்காக ஒன்றிணைந்து உழைப்பதற்கானத் தூண்டுதல், தன்னலமற்ற அயலவர் பணி நீதிக்கான அமைதிப் போராட்டம் ஆகியவைகளில் வெளிப்படும். நம் வரலாற்றில் பகிரவந்த இறைவன் மீதான நம் நம்பிக்கை, அவ்வரலாற்றின் அனைத்து முரண்பாடுகளோடும், அதே வரலாற்றிற்கான நம் அர்ப்பணத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. யாருடைய மாண்பு மீறப்பட்டு, காயப்படுத்தப்படுகிறதோ, அவர்களது நம்பிக்கையின் ஆதாரம் இது. ஏனெனில், பெத்லகேமில் பிறந்தவர், அனைத்து அடிமைத்தளைகளின் மூலக்காரணங்களிலிருந்தும் ஒவ்வொருவரையும் விடுவிக்க வந்தார்.

கிறிஸ்மஸ் ஒளி, இயேசு பிறந்த அம்மண்ணில் புதிதாக ஒளி வீசி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களைத் தூண்டி அவர்கள் நீதியான, அமைதியான இணக்க வாழ்வைப் பெற உழைக்க உதவுவதாக. இம்மானுவேலின் வருகை பற்றிய ஆறுதல் தரும் செய்தி ஈராக் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியின் அன்பு நிறை கிறிஸ்தவ சமூகங்களின் துன்பங்கள் மத்தியில் ஆறுதலைக் கொணர்வதாக. இது அவர்களுக்கு ஆறுதலையும் வருங்கால நம்பிக்கைகளையும் கொணர்வதாக; பலன்தரும் ஒருமைப்பாட்டைக் காண்பிக்கும் வண்ணம் உலகத்தலைவர்களையும் கொணர்வதாக. ஹெயிட்டியில் நில நடுக்கத்தின் பின் விளைவுகளாலும் அண்மையக் காலரா நோயாலும் துன்புறும் மக்களுக்கும் இது கிட்டுவதாக. கொலம்பியா, வெனிசுவேலா, குவாத்தமாலா, கோஸ்டரிக்கா என்ற நாடுகளில் அண்மைய இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இவ்வமைதி கிட்டுவதாக.

மீட்பரின் பிறப்பு எல்லைகளைக் கடந்த நீடித்த அமைதி மற்றும் உண்மை முன்னேற்றத்தை சோமாலியா, தார்ஃபூர், ஐவரி கோஸ்ட் மக்களுக்குத் தருவதாக; அது மடகாஸ்கரில் அரசியல் மற்றும் சமூக உறுதி நிலையை ஊக்குவிப்பதாக. இது பாதுகாப்பையும் மனித உரிமைகளுக்கான மதிப்பையும் ஆப்கானிஸ்தான் மற்றும், பாகிஸ்தானில் கொணர்வதாக. இது பேச்சு வார்த்தைகளை நிகராகுவா மற்றும் கோஸ்டரிக்காவிடையே ஊக்குவிப்பதாக. மீட்பரின் பிறப்பு, கொரிய தீபகற்பத்தில் ஒப்புரவை வளர்ப்பதாக.

மீட்பரின் பிறப்பு விசுவாச உணர்வையும் பொறுமையையும் சீனத் திருச்சபை விசுவாசிகளின் உறுதிப்பாட்டையும் பலப்படுத்தி, அவர்கள் தங்கள்மேல் திணிக்கப்பட்டுள்ள மதச்சுதந்திரக் கட்டுப்பாடுகளால் மனம் தளராமல், கிறிஸ்துவுக்கும் அவரது திருச்சபைக்குமான விசுவாசத்தில் உறுதியாய் நின்று நம்பிக்கை ஒளியை உயிரோட்டமுடையதாய் கொண்டிருக்க உதவுவதாக. 'கடவுள் நம்மோடு' என்பதன் அன்பு, பாகுபாடுகளையும் சித்ரவதைகளையும் அனுபவிக்கும் அனைத்துக் கிறிஸ்தவ சமூகங்களுக்கும் மனந்தளரா உறுதியை வழங்குவதாக. அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் அனைவரையும், மத விடுதலையை முழுமையாக மதிப்பதற்கான அர்ப்பணத்துடன் செயல்படத் தூண்டுவதாக.
 அன்பு சகோதர சகோதரிகளே, 'கடவுள் மனுவானார்'; அவர் நம்மிடையே குடிகொள்ள வந்தார்; அவரே இம்மானுவேல், நமக்கு அருகே வந்த கடவுள். நாம் ஒன்றிணைந்து அன்பின் இந்த உயர் மறையுண்மையைத் தியானிப்போம்; நம் இதயங்கள், பெத்லகேம் மாடடைத் தொழுவத்தில் ஒளிரும் அவ்வொளியினால் நிறையட்டும்! அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!







All the contents on this site are copyrighted ©.