2010-12-23 15:04:28

டிசம்பர் 24 நாளும் ஒரு நல்லெண்ணம்


அது டிசம்பர் 24 இரவு. கிறிஸ்மஸ் விழாவுக்கு முந்திய இரவு. மண் சாந்தால் கட்டப்பட்ட ஒரு படுக்கை அறையைக் கொண்ட அந்த வீட்டில் பரிசுப் பொருளுடன் ஒருவர் நுழைந்தார். அந்த அறையில் கிறிஸ்மசுக்கான எந்த ஓர் அறிகுறியும் இல்லை. ஆனால் அந்த அறைச் சுவர்களில் விதவிதமான விருதுகளும் மெடல்களும் தொங்கின. இது ஒரு படைவீரனின் வீடு என்பது மட்டும் புரிந்தது. அங்கு ஒரு வீரன் தனியாக, அமைதியாக இருட்டில் தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அந்த வீடு அலங்கோலமாகத் தெரிந்தாலும் அந்த வீரனின் முகம் மட்டும் மிக அமைதியாகத் தெரிந்தது. அந்த வீரன் கஷ்டப்பட்டு போரிட்டு வந்த களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்பகுதியில் போர் முடிந்து ஏற்பட்டிருந்த அமைதியில் அந்த ஊரே கிறிஸ்மஸ் விழாவிற்குத் தயாரித்துக் கொண்டிருந்தது. குழந்தைகள் பயமின்றி புத்தாடைகளுடன் பட்டாசுகளைக் கொளுத்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

பரிசு கொண்டு சென்றவர் அந்த வீரனின் காலடியில் அமர்ந்து கண்ணீர் விட்டார். அந்தக் கண்ணீரின் ஈரத்தால் விழித்துக் கொண்ட அந்த வீரன், அந்த ஆளைப் பார்த்து, ஏய் மனிதா, எனக்காக அழாதே. இந்த வாழ்க்கை நானாகத் தேர்ந்து கொண்டது என்று சொல்லிவிட்டு மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

இப்படி உலகின் பல இடங்களில் நாட்டுக்காக, தன் இன மக்களுக்காகப் போர் முகாம்களில் இருக்கும் வீரர்களுக்கு விழாக்கள் இல்லை. இவர்களைப் போன்றவர்களை விழா நாட்களில் நினைப்போம்.

கிறிஸ்மஸ் இதயம், கொடுக்கும் இதயம். இது மற்றவரை முதலில் நினைக்க வைக்கும் திறந்த இதயம். இயேசுவின் பிறப்பு வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வு. (George Mathew Adams)

கிறிஸ்மஸ் நாளில் ஒருவர் பிறருக்குக் கொடுக்கும் மகிழ்ச்சி அந்த நாளில் மட்டுமன்று அந்த ஆண்டு முழுவதும் அதே மகிழ்ச்சியாகத் திரும்பக் கிடைக்கும். ஏழைகள், தனிமையில் இருப்போர் மற்றும் வருத்தமாக இருப்போரை ஆசீர்வதிப்பதில் ஒருவர் எவ்வளவு நேரம் செலவிடுகிறாரோ அதே அளவு ஆசீர்வாதங்களை அவரது இதயம் அனுபவிக்கும் (John Greenleaf Whittier)என்று பெரியோர் சொல்கின்றனர்.



கிறிஸ்து பிறப்பு விழாவை எட்டாம் நூற்றாண்டிலிருந்து கிழக்கிந்திய சபையும் பதினோராம் நூற்றாண்டிலிருந்து மேற்கிந்திய சபையும் கொண்டாடத் துவங்கினர். ஆனால் முதன்முதலில் இந்த விழாவைக் கொண்டாடிய நாடு இங்கிலாந்துதான்! இயேசு பிறந்த பெத்லேகம் மற்றும் பிற உலக நாடுகளில் இயேசு பிறப்பை 14ம் நூற்றாண்டில்தான் கொண்டாடத் துவங்கினர் என்பதும் வரலாறு. கிறிஸ்துமஸ்.காம் என்று கூகிலில் தேடினால் 35,40,00,000 வலைத்தளங்களும், கிறிஸ்துமஸ் கதைகள் என்று தேடினால் 64,900,000 வலைத்தளங்களும், X'mas என்று தேடினால் 67,90,000 வலைத்தளங்களும், கிறிஸ்துமஸ் ஷாப்பிங் என்று தேடினால் 90,600,000 வலைத்தளங்களும், கிறிஸ்துமஸ் அலங்கரிப்புகள் என்று தேடினால் 88,30,000 வலைத்தளங்களும் கண்ணில் தட்டுப்படுகின்றது! என்கிறது ஒரு புள்ளி விபரம்








All the contents on this site are copyrighted ©.