2010-12-22 15:22:04

வெறுப்புணர்வுக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்படுமாறு தென் கொரிய மதத்தலைவர்கள் அரசை வலியுறுத்தல்


டிச.22,2010. தென் கொரியாவில் எதிர் நோக்கப்படும் பாகுபாடுகளைத் தடுக்கும் நோக்கத்தில் வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்படுமாறு அந்நாட்டு கத்தோலிக்கம் உட்பட ஏழு மதங்களின் பிரதிநிதிகள் அரசை கேட்டுள்ளனர்.

KCRL என்ற கொரிய மதத்தலைவர்கள் அவையின் பிரதிநிதிகள் இம்மாதம் 9 முதல் 16 வரை எருசலேம். உரோம் போன்ற புனித இடங்களுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட போது இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். இப்பயணத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்டையும் சந்தித்தனர்.

இனம், கலாச்சாரம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் வெறுப்புணர்வுக் காட்டப்படக் கூடாது என்று இத்தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

இதற்கிடையே, தென் கொரியாவில் ஐம்பது நாடுகளிலிருந்து பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட குடியேற்றதாரர்கள் இருப்பதால் அந்நாட்டின் கலாச்சாரம் வெகு வேகமாக மாற்றம் அடையும் என்று கொரியக் கலாச்சாரத்திற்கானக் கத்தோலிக்கக் கழகத்தின் உதவித் தலைவர் பிரான்சிஸ் பார்க் மூன்-சு அண்மைக் கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்தார்.

தென் கொரியாவில் இசுலாம் ஏற்கனவே நாட்டின் நான்காவது பெரிய மதமாக இருப்பதாகவும், அண்மை ஆண்டுகளில் முஸ்லீம்களின் குடியேற்றம் அதிகரித்திருப்பது இதற்குக் காரணம் எனவும் பார்க் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.