2010-12-22 15:20:59

பெத்லகேம் இடையர்களின் தலைமுறைகளுக்குத் தோழமையுணர்வு காட்டப்பட கர்தினால் ஃபோலே அழைப்பு


டிச.22,2010. கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலத்தில் நமது எண்ணங்கள் இயல்பாகவே பெத்லகேம் நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், அந்நகர் மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படுமாறு அழைப்பு விடுத்தார் கர்தினால் ஜான் ஃபோலே.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனானக் கடவுளை முதலில் வணங்கிய பெத்லகேம் இடையர்களின் தலைமுறைகள் பற்றிக் குறிப்பிட்ட கர்தினால் ஃபோலே, இன்று பெத்லகேமில் வாழும் அந்த இடையர்களின் தலைமுறைகளுக்கு நமது தோழமையுணர்வைக் காட்ட வேண்டும் என்று கூறினார்.

எருசலேம் புனித கல்லறையின் Equestrian என்ற பக்த சபை உறுப்பினர்களுக்கு உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்திய கர்தினால் ஜான் ஃபோலே இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

அந்த பெத்லகேம் குடிலுக்கு நாம் ஆன்மீக ரீதியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.

இந்த Equestrian பக்த சபையானது, கடந்த ஆண்டில் புனித பூமிக்கு ஏறக்குறைய எண்பது இலட்சம் யூரோக்களை நன்கொடையாக அனுப்பியுள்ளது. இந்த சபை செய்யும் நிதி உதவியின் ஒரு பகுதி, புனித பூமியில் 45 பள்ளிகளுக்குப் பயன்படுகிறது. மத வேறுபாடின்றி சுமார் 19 ஆயிரம் சிறார் இவ்வுதவியால் பலன் அடைகின்றனர்







All the contents on this site are copyrighted ©.