2010-12-22 15:43:34

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


டிச 22, 2010. RealAudioMP3 மனிதகுலத்தின் ஆழமான நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் நிறைவேற்றலாய் இருக்கும் இயேசுவின் பிரசன்னம் எனும் கொடையைப் பெறவும் அவரின் பிறப்பு குறித்த மறையுண்மையை ஆழமாகத் தியானிக்கவும், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு முந்தைய இந்நாட்களைப் பயன்படுத்துமாறு திருச்சபை அழைப்பு விடுக்கிறது. கடவுள் நம்மோடு என்ற பொருள் கொண்ட எம்மானுவேலாம் வாக்களிக்கப்பட்ட மீட்பரை முதன்முதலில் வரவேற்றவர்களையும், சூசை மற்றும் அன்னை மரியின் இதயங்களையும் நிறைத்த அந்த அமைதி நிறை மகிழ்ச்சியை நாமும் பகிர்கின்றோம். நம்மைப்போல் உருவெடுத்து நம் ஆதிபெற்றோரின் பாவங்களிலிருந்து நம்மை மீட்ட இறைவன், நாம் அவரைப்போல் மாறி அவரின் கண்கள் வழியாக இவ்வுலகை நோக்கி, அவரின் முடிவற்ற நன்மைத்தனம் மற்றும் கருணையின் வழியாக நம் இதயங்கள் புது மாற்றம் பெற நாம் அனுமதிக்குமாறு நம்மை வேண்டுகிறார். இந்த கிறிஸ்மஸின் போது அவரின் வருகைக்காக நாம் ஆன்மீக விதத்தில் நம்மைத் தயாரித்துள்ளதை குழந்தை இயேசு கண்டுகொள்வாராக. இந்நாட்களில் குடும்பங்கள் தயாரிக்கும் கிறிஸ்மஸ் குடிலானது, நம்மை நோக்கி வரும் ஆண்டவரைக் குறித்த நம் எதிர்பார்ப்பின் உரத்த அடையாளமாக உள்ளது. குழந்தைகளிலும் பெரியவர்களிலும் இந்தக் கிறிஸ்மஸ் குடில் எழுப்பும் வியப்பு நிலையானது, இறைவன் தன் அன்பு மகன் மனு உரு எடுத்ததில் வெளிப்படுத்தப்பட்ட இறையன்பாம் மறையுண்மைக்கு நெருக்கமாக நம்மைக் கொணர்வதாக. புதுப்பிக்கப்பட்ட மகிழ்வு மற்றும் நன்றியுணர்வுடன் இந்த மறையுண்மை குறித்து நாம் ஆழமாகத் தியானிக்க உதவுமாறு அன்னைமரி மற்றும் புனித வளனிடம் வேண்டுவோம். RealAudioMP3

இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்களையும் அளித்தார்.

இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.