2010-12-22 15:45:40

டிசம்பர் 23. – நாளும் ஒரு நல்லெண்ணம்


உலகம் தோன்றிய நாளிலிருந்து யாருடைய பிறப்புக்காக வரலாறு காத்திருந்ததோ அவரின் பிறப்பை மீண்டும் கொண்டாட நாம் நம்மைத் தயாரித்து வருகிறோம்.

முதல் மனிதனின் கீழ்ப்படியாமையின் போதே இறைவனால் ஏவாளுக்கு முன்னரைக்கப்பட்டுவிட்டது இயேசுவின் பிறப்பு.

மன்னராய் அவர் பிறப்பார் என மனுக்குலம் காத்திருக்க, அவரோ மாடடைக் குடிலில் பிறந்தது மட்டுமல்ல, மண்ணில் இரத்தம் சிந்தும் பலி மூலம் மனிதர்களை விடுவிக்க வந்தார்.

இன்றையக் கிறிஸ்மஸ் கொண்டாட்டமோ, வெளி அடையாளங்களில் தன்னை இழந்து வருகிறது.

வழிகாட்டியான நட்சத்திரம் வழங்கியது ஒளியும் அதன் வழி வழியும், அதில் ஒரு மகிழ்ச்சிச் செய்தியும்.

கிறிஸ்மஸ் தாத்தா என்றால் சிறார்களுக்குக் கொண்டாட்டம். அவர் வழங்கும் பரிசுகள் நினைவுக்கு வருகின்றன.

கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளில் அனுப்புநர் வழங்கும் வாழ்த்துக்களைப் பார்க்கிறோம்.

கிறிஸ்மஸ் மரமோ, ஆதி மனிதனின் பாவம் துவங்கிய இடத்தையும், அந்தப் பாவம் போக்க இறைமகன் தொங்கிய சிலுவை மரத்தையும் அடையாளம் காட்டி நிற்கின்றது. பாவ விடுதலையை வழங்கியது அந்த மரம்.

கிறிஸ்து பிறப்பு விழாவோடு தொடர்புடைய அனைத்துமே, கொடுப்பதில் கிட்டும் மகிழ்ச்சியின் அடையாளமாகவே உள்ளன.

இவ்விழாவின் அர்த்தங்களை அடையாளம் காண இந்நாட்கள் நமக்கு உதவட்டும்.

நமக்குத் தெரிந்தவர்களுக்கோ, நண்பர்களுக்கோ , உறவினர்களுக்கோ பரிசுகள் வழங்குவது விழாவை அர்த்தப்படுத்தாது. யாரும் நினைக்காத ஏழைகளையும், நிராகரிக்கப்பட்டவர்களையும் பரிசு கொடுத்து அரவணைப்பதே விழாவை அர்த்தப்படுத்தும். செயல்களிலே வெளிப்படட்டும் நம் ஆன்மீகம்.








All the contents on this site are copyrighted ©.