2010-12-20 15:00:14

மத்தியபிரதேசத்தில் கத்தோலிக்க குரு ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்


டிச.20, 2010. அண்மையில் கத்தோலிக்க குரு ஒருவர் தாக்கப்பட்டதையொட்டி, மத்திய இந்தியப் பகுதிகளில் உள்ள தலத்திருச்சபை அதிகாரிகள் வருகிற கிறிஸ்மஸ் காலத்தில் தங்களுக்கும் தங்கள் கோவில்களுக்கும் காவல் துறையினர் பாதுகாப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு மறைபரப்புப் பணித்தளத்தில் தங்கியிருந்த அருள்தந்தை தாமஸ் சிரட்டவயலில் என்ற இளங்குருவை அடையாளம் தெரியாத 12 பேர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு தாக்கினர்.

இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த அருள்தந்தை தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனக்கோ, தன் பணிக்கோ எந்தவித எதிரிகளும் இல்லாதச் சூழலில் தன்னைத் தாக்கியவர்கள் யார் என்றும் தாக்குதலின் நோக்கம் என்ன என்றும் தனக்குத் தெரியவில்லை என்று அருள்தந்தை UCAN செய்தி நிறுவனத்திற்கு கூறினார்.

இத்தாக்குதல் மனிதாபிமானமற்ற செயல் என்று சத்னா மறைமாவட்ட ஆயர் மேத்யு வனியகிழக்கெல் செய்தியாளர்களிடம் கூறினார். இதுபோன்ற தாக்குதலுக்கு எதிர் தாக்குதல்கள் மேற்கொள்ளாமல் தங்கள் பகுதியில் ஒற்றுமையும், புரிந்து கொள்ளுதலும் வளர்வதற்கு செபிப்பதே இந்த கிறிஸ்மஸ் காலத்தில் நமக்கு விடுக்கப்படும் அழைப்பு என்று ஆயர் மேலும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.