2010-12-20 15:03:03

ஜம்மு காஷ்மீரிலிருந்து வரும் அகதிகளுக்கு இந்தூர் மறைமாவட்டம் செய்யும் உதவிகள்


டிச.20, 2010. ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்து வரும் வன்முறைகளிலிருந்து தப்பித்து வரும் அகதிகளுக்கு மத்திய இந்தியப் பகுதியில் உள்ள ஒரு மறைமாவட்டம் உதவிகள் செய்து வருகின்றது.

மத்தியப் பிரதேசத்தின் தலை நகராகிய இந்தூரின் புறநகர்ப் பகுதியில் தற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 60 அகதிகள் குடும்பங்களுக்கு அம்மறைமாவட்டம் கடந்த சனிக்கிழமை முதல் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது.

காஷ்மீரிலிருந்து தப்பித்து வந்த இஸ்லாமிய குழுக்கள், பல அமைப்புக்களுக்கும் சென்று உதவிகள் கேட்டும் கிடைக்காமல், இறுதியில் கிறிஸ்தவ அமைப்புக்களிடம் தஞ்சம் தேடியதாகக் கூறினார் அகதிகளில் ஒருவரான Gulam Rasul Shah என்ற இஸ்லாமியர்.

தஞ்சம் தேடி வந்த அனைத்து இஸ்லாமியக் குடும்பங்களுக்கும் மத்திய பிரதேசக் காவல் துறையினரிடம் இருந்து அடையாள அட்டைகள் பெற்றுத் தந்ததுடன், அவரகளுக்குத் தேவையான உணவையும் வழங்கி வருவதாக மறைமாவட்ட சமூகப்பணி நிலைய இயக்குனர் அருள்தந்தை சைமன் ராஜ் கூறினார்.

மறைமாவட்ட சமூகப்பணி நிலையமும், அன்னை தெரேசாவின் பிறரன்பு சகோதரிகளும் இவ்வகதிகள் குடும்பங்களுக்கு அடுத்த சில வாரங்களாகிலும் உணவு வழங்க செயல் பட்டு வருகின்றனர் என்றும், இவ்விதம் உதவிகள் செய்வதற்கு கிறிஸ்மஸ் காலம் உந்துதலாய் உள்ளதென்றும் அருள்தந்தை சைமன் ராஜ் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.