2010-12-18 15:10:32

வெனெசுவேலாவில் அரசுத் தலைவருக்குக் கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பது அந்நாட்டில் ஊழலை அதிகரிக்கும் – ஆயர்கள் எச்சரிக்கை


டிச.18,2010. வெனெசுவேலா நாட்டில் அரசுத் தலைவர் Hugo Chavez வுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பது அந்நாட்டில் மேலும் பிரிவினைகளையும் ஊழலையும் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவையின் உதவித் தலைவர் பேராயர் பல்த்தசார் போரஸ்.

தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளைச் செய்வதற்குத் தனக்குக் கூடுதல் அதிகாரம் வேண்டுமென்று அரசுத் தலைவர் Chavez கேட்டுக் கொண்டதன் பேரில் அந்நாட்டு நாடாளுமன்றம் அவருக்குச் சிறப்பு சலுகைகளை இவ்வெள்ளியன்று வழங்கியுள்ளது. இதன்படி அடுத்த 18 மாதங்களுக்கு காங்கிரஸ் அவையின் ஆதரவை நாடாமல் அரசுத் தலைவரே சட்டங்களைச் செயல்படுத்தலாம். ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த Chavezக்கு இத்தகைய அதிகாரம் கொடுக்கப்படுவது இது நான்காவது தடவையாகும். தற்போதைய நாடாளுமன்றம் Chavezன் ஆதரவாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தின் இந்த நடவடிக்கை குறித்துக் கருத்து தெரிவித்த பேராயர் போரஸ், நாடு சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதாகத் தெரிகின்றது என்றும் வன்முறையும் ஊழலும் பெருக இது காரணமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 40 பேர் இறந்தனர் மற்றும் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.