2010-12-17 15:44:29

திருத்தந்தை : சமய சுதந்திரம் அடிப்படை மனித உரிமைகளில் முதன்மையானது


டிச.17,2010. ஒன்றிணைந்த இத்தாலி உருவாக்கப்பட்டதன் 150ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் இடம் பெற்று வரும் இவ்வேளையில், அந்நினைவுகளை மட்டுமல்ல, அந்நாடு தேசிய மற்றும் சர்வதேச அளவில் தற்போது எதிர்கொள்ளும் கஷ்டமான சூழல் குறித்தும் சீர்தூக்கிப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருப்பீடத்துக்கான இத்தாலியின் புதிய தூதர் ஃப்ரான்செஸ்கோ மரிய கிரேக்கோவிடமிருந்து இவ்வெள்ளிக்கிழமையன்று நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

1861ம் ஆண்டில் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட நிகழ்வு குறித்த மகிழ்ச்சியில் தானும் இணைவதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தாலிய அரசுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே இடம் பெற்ற இலாத்தரன் உடன்படிக்கை மூலம் வத்திக்கான் நகர நாடு உருவாக்கப்பட்டது குறித்துக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த உடன்படிக்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், சமய சுதந்திரம் முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கம் கொண்டிருந்தன என்று உரைத்தார்.

இந்த உடன்பாடுகள் அதிகாரத்தையோ அல்லது எவ்விதப் பொருளாதார, சமூக ஆதாயங்களையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக இவை விண்ணகத் தந்தையினால் குறிக்கப்பட்டப் பணியைச் செய்யும் நோக்கம் கொண்டவை என்று கூறினார்.

சமய சுதந்திரம் வழங்குதல் என்பது ஒரு மதத்தின் விசுவாசிகள் தங்களின் மனச்சான்று மற்றும் சமய சுதந்திரத்திற்கான உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மட்டுமல்ல, பொது வாழ்வில் அந்த மதமும் அதன் குழுக்களும் அதன் நியாயமான பங்கைச் செயல்படுத்தவும் உதவுவதும் ஆகும் என்றும் அவர் கூறினார்.

திருச்சிலுவை உட்பட மத அடையாளங்கள் பொது இடங்களில் வைக்கப்படுவதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டு, இத்தாலிய அரசு இவ்விவகாரத்தில் சரியானப் பாதையைத் தேர்ந்தது பற்றிய தனது பாராட்டையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.