2010-12-17 15:45:45

திருத்தந்தை : கிறிஸ்மஸ் மரம் சகோதரத்துவம் மற்றும் நட்புறவின் வெளிப்பாடு


டிச.17,2010. வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் இவ்வாண்டு வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரத்தை வழங்கிய ஜெர்மன் நாட்டு Tyrol பகுதி ஆயர், மேயர், குடிமக்கள் என சுமார் 300 பேரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார் திருத்தந்தை.

கிறிஸ்துமஸ் மரம், சகோதரத்துவம் மற்றும் நட்புறவின் செய்தியாக இருக்கின்றது என்ற திருத்தந்தை, இது, ஐக்கியத்துக்கும் அமைதிக்கும், நம் வாழ்விலும் சமூகத்திலும் கடவுளுக்கு இடமளிக்கவும் அழைப்பு விடுப்பதாகவும் இருக்கின்றது என்றும் கூறினார்.

கிறிஸ்து பிறப்பு காலம் முழுவதும் பேதுரு வளாகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் இந்த மரம், எண்ணற்றத் திருப்பயணிகளைக் கவர்ந்து கொண்டிருக்கும் என்றும் கிறிஸ்துமஸ் குடிலும், இந்த கிறிஸ்துமஸ் மரமும் நம்பிக்கை மற்றும் அன்பின் செய்தியை அறிவிக்கின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.

ஏறத்தாழ 1500 மீட்டர் (4921 அடி) உயரத்திலிருந்த இந்த மரம், அது இருந்த வனத்தின் வாழ்விற்கு எவ்விதத்திலும் சேதத்தை ஏற்படுத்தாத வகையில் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் திருத்தந்தை பாராட்டினார்.

93 ஆண்டுகள் வயதையுடைய இம்மரம் 34 மீட்டர் உயரம் கொண்டது.

இந்தக் கிறிஸ்துமஸ் மரத்தை வழங்கிய இம்மக்கள், மனித வாழ்வு, அன்பு, அமைதி ஆகியவற்றின் விழுமியங்களுக்குச் சாட்சிகளாக வாழ்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.