2010-12-17 15:41:28

டிசம்பர் 18. நாளும் ஒரு நல்லெண்ணம்


இறைமகன் இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பூவுலகில் மனிதனாகப் பிறந்தார். எளிமை, சமாதானம், பிறர் அன்பு, விடுதலை என்ற கனிகளைக் கொணர்ந்தார். இவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிப்பதிலேயே கிறிஸ்மஸ் விழாவின் அர்த்தம் நிறைந்து கிடக்கின்றது.
மனித நேயத்தின் உயரிய வெளிப்பாடாக இயேசுவின் வருகையை நம்புகிறது கிறிஸ்தவம். உலகின் மீது கடவுள் கொண்ட தாயன்பை நினைவுபடுத்துகிறது கிறிஸ்து பிறப்பு விழா.
இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சி வேகம் கண்டு வருகிறது. மனிதத் தேவைகள் அதிகரித்து வருகின்றன. வாழ்க்கைச் சூழ்நிலை மாறி வருகின்றது. காலத்தோடு ஒத்து போகின்ற இந்த வளர்ச்சி தேவைதான். இத்தகைய தேவைகளோடு வாழவேண்டிய ஒரு சூழ்நிலைக்கு மனிதன் ஆளாவதும் உண்மைதான். ஆனால், இத்தேவைகள் அவனுடைய உள்ளத்தை ஆக்கிரமித்து விடக்கூடாது. இன்று உண்மையில் என்ன நடந்து வருகிறது? மற்ற மனிதனின் அடிப்படைத்தேவையை விட என்னுடைய ஆடம்பரத்தேவை உயர்ந்தது என்றே வாழ்கின்றோம். ஆடை இன்றி, சத்தான உணவு இன்றி துன்பத்தில் துடிக்கின்றார்கள் நம் மக்கள். ஆனால் நாமோ அவர்களின் நிலையை எண்ணாது களியாட்டங்களில் நேரத்தையும் பணத்தையும் கரியாக்குகின்றோம். இம்மக்களின் நிலைகள் இக்கொண்டாட்டங்களில் நினைவு கூரப்படுகின்றனவா?
எங்கெல்லாம் அன்பு இருக்கின்றதோ அங்கெல்லாம் கிறிஸ்மஸ். எங்கெல்லாம் அன்புறவு உருவாகின்றதோ அங்கெல்லாம் கிறிஸ்து பிறக்கின்றார் என்பதை உணர்வோம்.







All the contents on this site are copyrighted ©.