2010-12-17 15:49:58

கிறிஸ்தவ விடுதலைப் போராட்ட தியாகிகள் நீதி கிடைக்க கோரிக்கை


டிச.17,2010. பங்களாதேஷில் 1971ம் ஆண்டு விடுதலைப் போரில் மானுடத்துக்கு எதிராகச் செய்யப்பட்ட குற்றங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று அந்நாட்டு கிறிஸ்தவ விடுதலைப் போராட்ட தியாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த மாதம் 14ம் தேதி பங்களாதேஷில் கடைபிடிக்கப்பட்ட நாற்பதாவது வெற்றி நாளில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

புவியியல் ரீதியாகச் சுதந்திரம் அடைந்திருந்தாலும் வறுமை மற்றும் சமயத் தீவிரவாதத்திலிருந்து நாடு இன்னும் விடுதலை அடையவில்லை என்று அந்தத் தியாகிகள் கூறினர்.

1971ம் ஆண்டு மார்ச் 26க்கும் டிசம்பர் 16க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த படுகொலைகளில் சுமார் முப்பது இலட்சம் பங்களாதேஷ் மக்கள் கொல்லப்பட்டனர். இரண்டு இலட்சம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகினர்.

அச்சமயம் உள்ளூர் முஸ்லீம் ஒத்துழைப்பாளர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட அறிவாளிகளையும் பல துறைகளில் தேர்ந்தவர்களையும் படுகொலை செய்தனர்.

பங்களாதேஷில் சுமார் 1500 கிறிஸ்தவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4,000 த்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உதவினர். ஆயர்களும் குருக்களும் அருட்சகோதரிகளும் அருட்சகோதரர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு புகலிடம் அளித்தனர்








All the contents on this site are copyrighted ©.