2010-12-16 15:18:21

தேவநிந்தனைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதை விரும்பும் பாகிஸ்தான் அரசுத் தலைவர்


டிச.16, 2010. பாகிஸ்தானில் கடைபிடிக்கப்படும் தேவநிந்தனைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதை தான் விரும்புவதாக பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி (Asif Ali Zardari) கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அரசுத் தலைவர் சர்தாரியை அண்மையில் சந்தித்த சிந்து மாநில அவை என்ற அமைப்பு இப்புதனன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் தலத் திருச்சபையும், பிற கிறிஸ்தவ அமைப்புக்களும், மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் அந்நாட்டில் நிலவும் தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
அண்மையில் இச்சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசியா பீபியின் வழக்கு இச்சட்டம் குறித்த விவாதங்களை மீண்டும் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளன.கடந்த வாரம் தகுந்த, வலுவான காரணங்கள் இன்றி, Naushad Ahmed Valiyani என்ற மருத்துவர், தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மருத்துவர் சங்கங்கள் மற்றும் பிற மனித உரிமை அமைப்புக்களும், அரசியல் அமைப்புக்களும், இச்சட்டத்தை மாற்றுமாறு அரசை வலியுறுத்தி வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.