2010-12-15 16:01:13

டிசம்பர் 16. – நாளும் ஒரு நல்லெண்ணம்


ஆண்டிற்கு ஒருமுறையாவது நம்முடைய உள்ளத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டியத் தேவை உள்ளது. இந்த ஆண்டு நிறைவுற இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன.

இந்த ஆண்டில் நமக்கு நாமே உண்மையுள்ளவர்களாக இருந்திருக்கிறோமா? நம்மைச் சுற்றியிருப்பவர்களுடன் எவ்வாறு நடந்துக்கொண்டோம்? நன்மை செய்தவர்களாக, நன்றியுள்ளவர்களாக வாழ்ந்தோமா?

பேராசை, அழுக்காறு கொண்டு பிறரை வஞ்சித்தோமா? பிறர் மீது சேற்றை வாரி இறைத்தோமா?

இன்னும் இதுபோன்ற எத்தனையோ கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நாம் புனிதர்கள் அல்ல. சாதாரண மனிதர்கள்.ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே ஏற்படும் சபலம், சலனம், சஞ்சலம் எல்லாவற்றிற்கும் அடிமையானவர்கள்தான் நாமும். சோதனைகள் நிறைந்த இவ்வுலகில் இவற்றை முற்றிலுமாக விலக்கி வைக்க இயலாது என்பதும் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனால், இது ஒரு நியாயப்படுத்தல் அல்ல. அதையும் தாண்டி வர வேண்டும் என்றுதான் இறைவனும், நம் சமூகமும், நம் நலம் விரும்பிகளும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆண்டின் இறுதியில் நாம் மேற்கொள்ளவிருக்கும் தேடலில் நம்முடைய பதில்கள் எதுவாக இருப்பினும், நம்முடைய சோதனையில் நாம் உண்மையாக இருந்தால் போதும். அதன் வழி கிட்டும் ஒளியில், நம் வழி தெளிவாகும்.








All the contents on this site are copyrighted ©.