2010-12-14 15:46:55

விவிலியத் தேடல்


RealAudioMP3
"நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சமாட்டேன்." என்ற திருப்பாடல் 23ன் நான்காம் திருவசனத்தில் மற்றொரு முக்கிய வார்த்தை 'என்னோடு'. இச்சொல்லின் ஆழமானப் பொருளை அடுத்த வாரம் தொடர்ந்து தேடுவோம் என்று சென்ற விவிலியத் தேடலை நாம் நிறைவு செய்தோம். இன்று தொடர்கிறோம்.


வாழ்வில் துன்பத்தின் இருள் சூழும் பல நேரங்களில் நம் மனதில் இறைவன் நம் பக்கம் இருக்கிறாரா என்ற கேள்வி எழும். அவரும் நமக்கு எதிராக இருப்பது போல் தோன்றும். இந்த எண்ணத்திற்கு ஒரு மாற்றாக, திருப்பாடல் ஆசிரியர் சொல்வது இதுதான்: “நான் துன்பத்தில் இருக்கும் போது, தீமையைச் சந்திக்கும் போது, கடவுள் துன்பத்தின் பக்கத்திலோ தீமையின் சார்பிலோ இல்லை அவர் என்னோடு இருக்கிறார்.” 'நீர் என்னோடு இருப்பதால்' என்ற வார்த்தைகளால் இக்கருத்தை வலியுறுத்திச் சொல்கிறார் ஆசிரியர்.
‘இறைவன் நம்மோடு’ என்பது திருவருகைக் காலத்தில் நமக்கு அடிக்கடி நினைவுபடுத்தப்படும் இறைவனின் ஓர் அழகிய இலக்கணம். இறைவன் நம்மோடு இருக்கிறார், அதிலும் முக்கியமாக துன்புறும் நேரத்தில் நம் ஒவ்வொருவரோடும் இருக்கிறார் என்ற எண்ணத்தை விளக்க, Harold Kushner விடுதலைப் பயண நூலிலிருந்து ஒரு முக்கியமான சம்பவத்தை எடுத்துக் காட்டுகிறார். எரியும் புதரில் தோன்றிய கடவுளை மோசே சந்திக்கும் நிகழ்ச்சி. இஸ்ரயேல் மக்களின் துன்பங்களை, அழுகுரலைக் கேட்டு, கடவுள் இறங்கி வருகிறார். மோசேயைத் தன் பணிக்கேனத் தேர்ந்தெடுக்கிறார். மோசே தயங்குகிறார். அந்தப் பகுதியைக் கேட்போம்:

விடுதலைப் பயணம் 3: 9-11
அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்: அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன். இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.மோசே கடவுளிடம், “பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?” என்றார். அப்போது கடவுள், “நான் உன்னோடு இருப்பேன்.என்றார்.
மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, அவர் பெயர் என்ன? என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார்.

‘இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து கொண்டு வருவதற்கு நான் யார்’ என்று மோசே கேட்கிறார். தன்னைப் பற்றிய தெளிவு பெற விழைந்த மோசேக்கு, அந்தத் தெளிவை இறைவன் தரவில்லை. மோசே யார் என்பதைக் கூறாமல், இறைவன் அளிக்கும் பதில்: "நான் உன்னோடு இருப்பேன்." தனது திறமை, முக்கியமாக, தனது பேசும் திறமை குறித்து மிகவும் நம்பிக்கையின்றி இருந்தார் மோசே. இந்தப் பணிக்குச் செல்ல தனக்குத் தகுதியில்லை, சக்தியில்லை என்பதை வலியுறுத்திச் சொல்லவே அவர் 'இதைச் செய்ய நான் யார்?' என்று கேட்கிறார். அதற்கு இறைவன் 'நான் உன்னுடன் இருப்பது தான் நீ தேடும் சக்தி' என்கிறார். தனது பேசும் திறமையைக் குறிப்பிட்டுக் கூறி பின் வாங்க நினைக்கும் மோசேயிடம், நான் உன்னோடு இருப்பேன், உன் நாவிலும் இருப்பேன், உன் சகோதரன் ஆரோனின் நாவிலும் நான் இருப்பேன் என்று இந்த சந்திப்பின் இறுதியில் உறுதியளிக்கிறார் இறைவன். (விடுதலைப் பயணம் 4: 12-17)

இதற்குப் பின், மோசே ஓரளவு தெளிவு பெறுகிறார். மீண்டும் அவருக்கு எழும் அடுத்த கேள்வி இது: " நீர் என்னுடன் இருக்கிறீர், சரி. உம்மை நான் எப்படி எகிப்தில் அறிமுகம் செய்வது?" இந்தக் கேள்விக்கும் இறைவனின் பதில்: "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே."
நான் இருக்கிறேன், நான் உன்னோடு இருப்பேன் என்று கடவுள் தரும் பதில்களை இறையியல், மெய்யியல் கண்ணோட்டங்களில் பார்த்தால், இந்த வார்த்தைகளுக்கு பெரிய விளக்கங்கள் தரலாம். ஆனால், கடவுள் மோசேக்கு அளிக்கும் பதில்களை எளிய வழியில் சிந்தித்தால், இந்த பதில்கள் கடவுளின் ஒரு முக்கியமான இலக்கணத்தை அறிய உதவும் பதில்கள் என்பதை உணரலாம். இறைவன் என்றும் இருக்கிறவர். அவர் இருப்பதெல்லாம் துன்புறும் மக்களுடன் இருப்பதற்கே. துன்புறும் மக்களோடு இருக்கின்றவர், அம்மக்களுக்காகப் போராடச் செல்லும் மோசே போன்ற தாராள உள்ளங்களுடனும் இருக்கின்றவர்; அந்தத் தாராள மனங்களின் வழியாகத்தான் கடவுள் இன்றும் இவ்வுலகில் இருக்கின்றார்.
விடுதலைப் பயணம் முழுவதும் மோசே துன்பங்களை அடுக்கடுக்காகச் சந்தித்தார். திருப்பாடல் ஆசிரியர் கூறும் சாவின் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கினை, மோசே அந்தப் பாலை நிலப் பயணத்தில் உணர்ந்தார். கடந்தார். நாற்பது ஆண்டுகள் அவர் அனுபவித்த அந்தத் துன்பப் பயணத்தின் இறுதியில், வாக்களிக்கப்பட்ட நாட்டில் நுழைய முடியாது என்ற உண்மை மோசே சந்தித்த மிகக் கொடிய துன்பமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கொடிய துன்பத்திலும் இறைவன் தன்னோடு இருப்பதை உணர அவர் பக்குவப்பட்டு விட்டதால், தன் வாரிசான யோசுவாவிடம் அவர் சொல்லும் வார்த்தைகள் அற்புதமாக அமைகின்றன.

இணைச் சட்டம் 31: 7-8
பின்னர் மோசே யோசுவாவை வரவழைத்து, இஸ்ரயேலர் அனைவர் முன்னிலையிலும் அவரிடம் கூறியது: வலிமை பெறு; துணிவுகொள்; இவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், இந்த மக்களோடு நீ செல்லவேண்டும். அதை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளமாறு செய்யவேண்டும். ஆண்டவரே உனக்குமுன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே! 
மோசே, யோசுவா என்று இஸ்ரயேல் மக்கள் தலைமுறை தலைமுறையாக அளித்த அழகான ஓர் உண்மை: தீமைகள் எப்பக்கமும் நம்மைச் சூழ்ந்தாலும் இறைவன் நம் பக்கம் இருக்கிறார் என்ற உண்மை. பல தலைமுறையாக தன் மக்கள் கண்டுணர்ந்த இந்த உண்மையை திருப்பாடலின் ஆசிரியர் "நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சமாட்டேன்." என்ற இந்த வரியில் மீண்டும் தன் அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் சென்றுள்ளார்.
இந்தப் பரம்பரையில் வந்த மரியாவை இறைவனின் தூதர் சந்தித்தபோது கூறிய முதல் வாழ்த்து, "அருள் மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்." என்பதுதான். இறைவன் உம்மோடு என்பது மரியாவுக்கு மகிழ்வைத் தரவில்லை. இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கினார் என்று நற்செய்தி கூறுகிறது. தொடரும் அந்த உரையாடல் வழியே இறைவன் தன்னோடு என்பதன் பொருளை உணர்ந்த மரியா இறைவன் தன்னோடு, தனக்குள் வந்து தங்குவதற்கு அனுமதி வழங்குகிறார். இந்த சம்பவத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் ஒன்று உண்டு. இறைவன் தன்னுடன் வருவது தனக்குத் துன்பம் தரும் என்பது தெரிந்தாலும், தன் வழியாக இறைவன் இந்த உலகத்தோடு இருப்பார் என்ற எண்ணம் மரியாவை சம்மதம்தரத் தூண்டுகிறது. துன்பம் நம்மைச் சூழும் போது, இறைவன் நம்மோடு இருப்பதால், துன்பங்கள் விலகாமல் போகலாம். ஒருவேளை மரியாவின் வாழ்வில் நடந்தது போல், துன்பங்கள் மேலும் கூடலாம். ஆனால், இவைகள் அனைத்தின் வழியாக நாம் உணர வேண்டிய உண்மை... இறைவன் நம்மோடு இருப்பதால், துன்பங்களைத் தாங்கும் சக்தி நமக்குக் கிடைக்கும் என்பதுதான்.

இஸ்ரயேல் பரம்பரையில் வந்த பவுல் அடியார் துயரத்தின் நடுவிலும் இறைவன் நம்மோடு என்ற எண்ணத்தை உரோமையருக்கு எழுதியுள்ள திருமுகத்தில் ஒரு கவிதைபோல் கூறியுள்ளார்.

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8 31-39
இதற்குமேல் நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம் என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

இஸ்ரயேல் குலத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பல இரத்தத்தால் எழுதப்பட்ட பக்கங்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். தொடர்ந்து தங்கள் குலம் வேட்டையாடப்பட்டாலும், வேதனைத் தீயில் இவர்கள் சாம்பலாக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் அந்தச் சாம்பலில் இருந்து இவர்கள் எழுந்து வந்துள்ளது மனித குலத்தை பிரமிக்க வைத்துள்ளது. நாம் இந்த சிந்தனைகளை எழுப்பும் இந்த டிசம்பர் 15ம் தேதி 1941ம் ஆண்டு நாசி படையினரால் உக்ரேனின் ஹார்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று வரலாறு சொல்கிறது.
ஒரு குண்டு துளைத்து ஒரு நொடியில் இறப்பது மேல் என்று சொல்லும் அளவுக்கு பல லட்சம் யூதர்கள் வதை முகாம்களில் ஒவ்வொரு நாளும் அணு அணுவாய் கொல்லப்பட்டனர். இந்த வதைமுகாம்கள், இஸ்ரயேல் மக்கள் கடந்து வந்த இருளும், சாவும் சூழ்ந்த பள்ளத்தாக்குகள்.
Auschwitz வதை முகாம் பற்றி அண்மையில் வெளியான ஒரு புகைப்பட அல்பத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள். நாசி வதைமுகாம் அதிகாரிகளால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் 1944ம் ஆண்டு அந்த வதைமுகாமில் துன்புற்ற Lilly Jacob-Zelmanovic Meier என்ற பெண்ணுக்குக் கிடைத்தது. இணையதளத்தில் The Auschwitz Album என்று தேடினால் இந்தப் புகைப்படங்களைக் காணலாம்.
மீண்டும் மீண்டும் காட்டப்படும் அல்லது சொல்லப்படும் இந்த வரலாற்றில் பெரும்பாலும் கொடுமைகளே அதிகம் பேசப்பட்டுள்ளன. ஆனால், இந்த வதை முகாம்களில் இருந்த யூதர்களில் பலர் தாங்கள் நம்பிக்கை இழக்காமல், பிறருக்கும் நம்பிக்கை தந்த சம்பவங்களும் இருந்தன. துன்பங்கள் நிறைந்த பல நூற்றாண்டுகளை இஸ்ரயேல் மக்கள், யூதர்கள் கடந்து வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் தலைமுறை தலைமுறையாக அவர்கள் விட்டுச் சென்ற ஞானம் நிறைந்த சொற்கள்: "நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சமாட்டேன்." கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?







All the contents on this site are copyrighted ©.