2010-12-13 16:04:13

விகிலீக்ஸ் வெளியிட்டு வரும் ஆவணங்களைக் கவனத்துடன் படிப்பது நல்லது - வத்திக்கான் பத்திரிகை அலுவலகம்


டிச.13, 2010. விகிலீக்ஸ் (Wikileaks) என்ற ஊடக அமைப்பு அண்மையில் வெளியிட்டு வரும் ஆவணங்களைக் கவனத்துடன் படிப்பது நல்லதென்று வத்திக்கான் பத்திரிகை அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த மாதம் 28 முதல் இந்த அமைப்பு வெளியிட்டு வரும் பல்வேறு ஆவணங்கள் குறித்து பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும் பதிலுரைகளைக் கூறி வருகின்றன.

இதுவரை வெளியாகியுள்ள 1,340 ஆவணங்களில் திருப்பீடத்திற்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதரகத்திற்கும் அந்நாட்டின் அரசுத் துறைகளுக்கும் இடையே பரிமாறப்பட்ட 16 ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், இத்தூதரகத்தில் பணி புரிந்த, அல்லது பணி புரியும் தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமேயொழிய, இவை திருப்பீடத்தின் அதிகாரப் பூர்வமான கருத்துக்களாக எடுத்துக் கொள்ளப்படக் கூடாதென்பதில் கவனம் தேவை என்று வத்திக்கான் பத்திரிகை அலுவலகம் கருத்து தெரிவித்துள்ளது.

உலகின் 274 நாடுகளில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதரகங்களுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத் துறைகளுக்கும் இடையே 1966ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை பரிமாறப்பட்டுள்ள 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளதென்றும், நவம்பர் மாத இறுதியில் வெளியாக ஆரம்பித்த இந்த ஆவணங்கள் இன்னும் தொடரும் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.