2010-12-13 16:02:39

கத்தோலிக்கர் உலகிற்கு ஒளியைக் கொண்டுவர திருத்தந்தை அழைப்பு


டிச.13, 2010. உண்மையின் மற்றும் கடவுளின் நன்மைத்தனத்தின் அமைதியான ஒளி, உலகில் உண்மையான மாற்றத்திற்கு இட்டுச் செல்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இஞ்ஞாயிறன்று உரோம் புறநகர்ப் பகுதியிலுள்ள புனித மாக்ஸ்மிலியன் கோல்பே பங்குக்குச் சென்று திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

பல போலியான இறைவாக்கினர்களும் சர்வாதிகாரிகளும் தாங்களே உலகிற்கு மாற்றங்களைக் கொண்டு வருபவர்கள் என்றும் கிறிஸ்து அல்ல என்றும் கூறினர், ஆனால் இவர்கள் பேரரசுகள், சர்வாதிகாரம் இத்தகைய ஆட்சிகள் மூலம் உலகை மாற்றுவதில் வெற்றியடைந்தார்கள், ஆயினும், இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பெரும் அழிவிலும் பெரும் வெறுமையிலும் முடிந்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்று கூறினார் திருத்தந்தை.

கடவுளின் மகன் உலகில் தீவிரமான மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற திருமுழுக்கு யோவானின் எதிர்பார்ப்பு குறித்து நினைவுபடுத்தி, அவர் கிறிஸ்துவிடம் தமது சீடர்களை அனுப்பி வரவிருப்பவர் நீர்தாமா? என்று கேட்டுவரச் சொன்னது குறித்தும் திருத்தந்தை விளக்கினார்.

திருமுழுக்கு யோவானின் கேள்விக்குச் கிறிஸ்து சொல்லி அனுப்பிய பதில் பற்றியும் விளக்கிய திருத்தந்தை, தான் இரத்தப் புரட்சியைச் செய்யவில்லை, படைபலத்தால் தான் உலகை மாற்றவில்லை, ஆனால் சகாப்தங்களில் மாபெரும் ஒளியின் பாதையை அமைக்கும் பல விளக்குகளை அமைத்துள்ளேன் என்று கிறிஸ்து சொல்லி அவர் தமது செயல்களைப் பார்க்குமாறுக் கூறியதையும் எடுத்துச் சொன்னார்.

புனித கோல்பே இந்த ஒளியைத் தனது வாழ்வில் காண்பித்தார் என்ற திருத்தந்தை, இப்புனிதர், Auschwitz நாத்சி வதைப்போர் முகாமில் ஒரு குடும்பத்தின் தந்தைக்காகத் தான் கொல்லப்பட்டு தனது வாழ்வை அளித்தார். இவ்வாறு செய்ததன் மூலம் புனித கோல்பும் துன்பப்படுவோர், ஒடுக்கப்படுவோர் மிக அருகில் நாம் இருப்பதற்கு நம்மை ஊக்கப்படுத்துகிறார் என்றார் திருத்தந்தை.

மொலோக்காயில் தொழுநோயாளர்கள் மத்தியில் வேலை செய்த புனித தமியான், ஏழைகளுக்கு உதவி செய்து அவர்கள் போலவே வாழ்ந்த கல்கத்தா அன்னை தெரேசா போன்ற பிற கிறிஸ்தவர்கள் பற்றியும் திருத்தந்தை தனது மறையுரையி்ல் எடுத்துக் கூறினார்.

புனித கோல்பே, 1982ம் ஆண்டு திருத்தந்தை 2ம் ஜான் பவுலால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.