2010-12-13 14:53:19

ஆடம்பரத்திலா சமூகக் கெளரவம்!


டிச.14,2010. அமெரிக்காவில் போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. அச்சமயம் ஓரிடத்தில் ஒரு பத்துப் பதினைந்து படை வீரர்கள் சேர்ந்து ஓர் உத்திரத்தை நகர்த்துவதற்குப் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குழுவின் தலைவன் குதிரையில் அமர்ந்தபடி அவர்களை அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான். ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அந்த உத்திரத்தை நகர்த்த முடியாதபடி அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டதைக் கண்டு அத்தலைவன் மேலும் குரலை உயர்த்திக் கொண்டிருந்தான். அப்போது அங்குக் குதிரையில் வந்த வீரன் ஒருவன் அந்தத் தலைவனைப் பார்த்து, “அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே… நீயும் அவர்களோடு சேர்ந்து அதை நகர்த்தக் கூடாதா?” என்று கேட்டான். அதற்குக் குழுத்தலைவன், “நான் யார் தெரியுமா? அவர்களின் தலைவன்… என்னால் அவர்களோடு சமமாக வேலை செய்ய முடியுமா?” என்று சீறினான். குதிரையில் வந்தவன் கீழே இறங்கி, அந்த வீரர்களுக்கு உதவி, உத்திரத்தை நகர்த்தி அதன் இடத்தில் வைத்து விட்டுத் தனது குதிரையில் ஏறி அமர்ந்தான். பின்னர் அந்தத் தலைவனைப் பார்த்து, “இனி இப்படிக் கடினமாக வேலை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். நிச்சயம் நான் வந்து உதவுகிறேன்” என்று உரக்கச் சொன்னான். அப்போது அத்தலைவன், ஆமாம், நீ யார்? உனக்கு எப்படிச் சொல்லி அனுப்புவது? உன் இருப்பிடம் எது? என்று அலட்சியமாகக் கேட்டான். “நானா… நான் ஜார்ஜ் வாஷிங்டன். உங்களின் தலைமைத் தளபதி” என்று அழுத்தமாகக் கூறி விட்டுக் குதிரையில் பறந்தார் அந்த வீரன்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் அரசுத் தலைவரான ஜார்ஜ் வாஷிங்டன்தான் இந்த வீரத் தளபதி. அப்போதைய அமெரிக்கப் போர் அவர் தலைமையில்தான் நடந்து கொண்டிருந்தது. இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் அதிபர் என்பது மட்டுமல்ல; அந்நாட்டின் வரலாற்றை உருவாக்கியவர்களிலும் முதன்மையானவர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசியல் வரலாறு ஜார்ஜ் வாஷிங்டனிடம் இருந்துதான் தொடங்குகிறது. அவர் அமெரிக்கப் படைப்பிரிவின் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது பத்தொன்பது மட்டுமே. அமெரிக்கப் புரட்சிகர இராணுவத்தின் முதன்மைக் கமாண்டராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய அமெரிக்க இராணுவம் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பலத்தில் இல்லை. ஆயினும் இவர், மாபெரும் பிரித்தானியப் பேரரசோடு மோதுவதற்கு இந்தப் படைகளை வழிநடத்திச் சென்றார். இது அமெரிக்காவின் முதல் சுதந்தரப் போர். அமெரிக்கா சந்தித்த முதல் பெரும் வெற்றியும் இதுவே.

ஜார்ஜ் வாஷிங்டன், 1799ம் ஆண்டு டிசம்பர் 14ம் நாள் உள்ளூர் நேரம் இரவு பத்து மணிக்கு தனது 67வது வயதில் நிமோனியாக் காய்ச்சலால் காலமானார். தங்களது தேசத் தந்தையின் மறைவு குறித்து நாடே துக்கத்தில் மூழ்கியது. ஏறத்தாழ ஐந்து பத்தாண்டுகள் தான் பிறந்த மண்ணுக்கு நற்சேவையாற்றிய இவர் உதிர்த்த கடைசி வார்த்தைகள் என்ன தெரியுமா?

"நான் இவ்வுலகிலிருந்து விடைபெறப் போவதாக உணர்கிறேன். நீங்கள் அனைவரும் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டதற்கு நன்றி. எனினும், நீங்கள் என்னைப் பற்றி மேலும் துயரம் அடைய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை அமைதியாகப் போகவிடுங்கள். என்னால் இனிமேல் வாழ முடியாது"

1796ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி வாஷிங்டன் பணி ஓய்வு பெற்ற போது அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களுக்கு எப்படி உரையாற்றினார் என்றால் ....

"கறைபடியாதக் கரங்களுடன், தூய்மைகெடாத இதயத்துடன் உங்களை விட்டுச் செல்கிறேன். இந்நாட்டில் நாம் நமது முதல் மூச்சை விடுவதற்குக் காரணமான நம் முன்னோர்களும் நானும் விரும்பிய நல்வாழ்வுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மிக உருக்கமுடன் இறைவனிடம் செபிப்பேன்".

ஜார்ஜ் வாஷிங்டன் இரண்டாவது தடவையாக எல்லாராலும் போட்டியின்றி அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓய்வு பெற்றார். ஆனால் 1798ல் பிரான்ஸ் நாட்டோடு மோத வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது அமெரிக்கப் படைகளை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு இவரிடம் கட்டாயமாக ஒப்படைக்கப்பட்டது. நாட்டிற்காக அதனை முனமுவந்து ஏற்ற நாட்டுப் பற்றுக் கொண்ட நல்ல மனிதர் இவர். இவரது அடக்கச் சடங்கின் போது Henry Lee என்பவர்

“வாஷிங்டன் போரில் முதன்மையானவர், சமாதானம் அமைதி இவற்றைக் காப்பதிலும் முதன்மையானவர். தனது நாட்டு மக்களின் இதயங்களிலும் முதன்மையானவர்”

என்று புகழாரம் சூட்டினார். வாஷிங்டன் இறந்த செய்தி கேட்ட போது நெப்போலியனின் படைகளும் பிரித்தானியப் படைகளும் அஞ்சலி செலுத்தினவாம். இந்த மாமனிதர், உத்திரத்தை நகர்த்த கஷ்டப்பட்ட படைவீரர்களுக்கு உதவி செய்யுமளவுக்கு எளிமையும் அடக்கமும் நிறைந்த அரசியல் தலைவராக விளங்கியிருக்கிறார்.

நமது நாட்டுத் தலைவர்கள் பற்றிக் கடந்த வாரத்தில் தமிழ் நாளிதழ் ஒன்றில் ஒரு தலையங்கத்தை வாசித்தோம். “கட்சிகள் எதுவாக இருந்தாலும், நமது அரசியல் தலைவர்களின் மனப்போக்கில் பெரிய மாற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கட்சி மாநாடுகளை பலகோடி ரூபாய்கள் செலவழித்து பிரம்மாண்டமாக நடத்திக்காட்டுவது தங்களது அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்த என்று சகித்துக் கொள்ளலாம். ஆனால், தங்களது வாரிசுகளின் திருமணத்தைப் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டி, தங்களது செல்வத்தையும் செல்வாக்கையும் வெளிச்சம்போட நமது அரசியல் தலைவர்கள் ஏன் ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் புதிராக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த அரசியல் திருமணங்களையும், அதற்கு முன்னால் நடந்த அரசியல் திருமணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வேறுபாடு தெரிகிறதே. ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் எத்தனை கோடிப்பேர் நமது இந்தியாவில்? பெண்களைப் பெற்றுவிட்டு அவர்களைக் கரையேற்ற வழியில்லாமல் தவிக்கும் பெற்றோர் எத்தனை எத்தனை பேர்? அரசியல் தலைவர்கள் தாங்கள் பொதுவாழ்க்கையில் ஒரு முன்னுதாரணமாக இருந்து காட்டவேண்டும் என்கிற எண்ணம்கூட இல்லாமல் இருக்கிறார்களே என்பதுதான் வேதனையைத் தருகிறது”.

எங்கு, யாரிடத்தில் எளிமையும் இரக்கமும் பண்பும் பாசமும் இருக்க வேண்டுமோ அங்கு அவர்களிடத்தில் அவை குறைபடுகின்றன. கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் நான்கில் ஒருவரும், இந்தியாவில் இரண்டில் ஒருவரும் வேலையை முடிப்பதற்கு இலஞ்சம் கொடுத்துள்ளனர் என்று Transparancy என்ற ஜெர்மன் நாட்டு அரசு சாரா அமைப்பு ஆய்வை வெளியிட்டுள்ளது. இதுதான் இன்றைய அரசியல் நிதர்சனம்.

ஒரு மதத் தலைவர் சொன்னார் : “பெருமையடிப்பவன் விண்ணகத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் விண்ணகத்தில் நுழையமாட்டான்” என்று.

ஸ்ரீ காஞ்சி பெரியவர் சொன்னார் :”மனிதனுக்கு ஆசை என்பது, எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணும் நெருப்புப் போன்றது. நாம் எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்ம சுகம் கிடைக்கும். நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே பிறரும் வாழ வேண்டும் என்று நினைப்பதற்கு முன்னர் நாம் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். அதற்கு மேல் ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை” என்று.

“அடக்கம் அமரர்உள் உய்க்கும்; அடங்காமை

ஆர்இருள் உய்த்துவிடும்” என்று திருக்குறளும் சொல்கிறது. ஆனால் நம்மில் பலர், பகட்டிலும் ஆடம்பரத்திலும்தான் சமூகக் கெளரவம் இருக்கின்றது என்ற மாயச் சிந்தனையில் மயங்கிக் கிடக்கிறோம். நமது ஆடம்பரம்கூட பிறர் பார்ப்பதற்காகத்தானேச் செய்யப்படுகின்றது. நமது சமூக அந்தஸ்து இவற்றில்தான் இருக்கின்றது என்பது உண்மையானால், தனக்கெனச் சொந்த வீடுகூட இல்லாத காமராஜரைப் பெருந்தலைவர் என வாழ்த்துகிறோமே அது ஏன்? காமராஜர் கண்மூடியதும் அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக் கொண்டார். அவர் பயன்படுத்திய காரைக் கட்சி எடுத்துக் கொண்டது. அவருடைய உடலை நெருப்பு எடுத்துக் கொண்டது. ஆனால் அவரது பெயரை மட்டும் வரலாறு எடுத்துக் கொண்டது.

சட்டைபோடாத அரைநிர்வாண நமது காந்திஜியை உலகமே போற்றுகிறதே, அது ஏன்?. ஒருமுறை இவர் பீகாரில் பயணம் செய்தபோது, அவருக்கு உதவியாக இருந்த மனுபென், காந்தி பயன்படுத்தும் பென்சில் மிகவும் சிறியதாகி விட்டதால், அதை மாற்றி ஒரு புது பென்சிலை வைத்தார். மகாத்மா நள்ளிரவில் மனுவை எழுப்பி, “எனது சிறிய பென்சிலைக் கொண்டு வா” என்றார். தூக்கக் கலக்கத்தில் தேடிய மனு கையில் அந்தச் சிறிய பென்சில் சிக்கவில்லை. “சரி, காலையில் தேடு. இப்போது தூங்கு” என்றார் பாபுஜி. விடியற்காலை மூன்றரை மணிக்குப் பிரார்த்தனை முடிந்ததும் மனுவிடம் பென்சிலை நினைவூட்டினார். அதிக நேரம் தேடி ஒரு வழியாக அந்தப் பென்சிலைக் கண்டுபிடித்துக் காந்திஜயிடம் கொடுக்க வந்தார். அப்போது அவர், “கிடைத்து விட்டதா? நல்லது. ஆனால் அது இப்போது தேவையில்லை. பத்திரமாக எடுத்து வை!” என்றதும் மனுவுக்கு உள்ளூரக் கோபம் வந்தது. டில்லி திரும்பியதும் இரு வாரம் கழித்து அந்தப் பென்சிலை பாபுஜி கேட்டதும் மனு கொண்டு வந்து கொடுத்தார். “மகளே, நீ என் சோதனையில் தேறிவிட்டாய். நமது நாட்டின் ஏழ்மையை நீ அறிவாய். பல்லாயிரக்கணக்கானச் சிறுவர்களுக்கு இந்தச் சிறிய பென்சில்கூட இல்லை. இதைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக இன்னும் எவ்வளவோ எழுதலாம். ஒரு துண்டு பென்சில் ஒரு துண்டுத் தங்கத்துக்குச் சமம்!” என்றார் மகாத்மா.

இப்படி காந்திஜி, காமராசர், தந்தை பெரியார், நேரு என அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரின் எளிமை வாழ்வு பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம். நல்ல தலைவர்களால் வீடும் நாடும் செழிக்கும். சமூகத்தில் கிடைக்கும் கெளரவம் ஆடம்பர வாழ்வில் அல்ல, மாறாக அடக்கமான எளிய வாழ்வில்தான். எளிமையே மாபெரும் இதயங்களின் இயல்பு.

பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் எளிமைக் கோலத்தில் பிறந்த இயேசுவும் ஆடம்பரப் பகட்டு வாழ்வுக்கு அல்ல, எளிமையான வாழ்வுக்கே அழைப்பு விடுக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.