2010-12-13 16:06:48

BBCயில் கிறிஸ்து பிறப்பைக் குறித்து தொலைகாட்சித் தொடர்


டிச.13, 2010. கிறிஸ்து பிறப்பைக் குறித்து 'The Nativity' என்ற ஒரு தொலைகாட்சித் தொடரை நான்கு பாகங்களாக BBC நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது.

இத்தொடரின் ஒவ்வொரு பாகமும் 30 நிமிடங்கள் நீடிக்கும் என்றும், டிசம்பர் 20 முதல் 23 முடிய நான்கு நாள் மாலை ஏழுமணிக்கு ONE Show என்ற பகுதியில் இந்த நிகழ்ச்சி காட்டப்படும் என்றும் BBC நிறுவனம் அறிவித்துள்ளது. ONE Show என்ற நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் சராசரி 50 லட்சம் மக்கள் பார்த்து வருகின்றனர் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை (Life on Mars) போன்ற சில தொலைகாட்சித் தொடர்களை தயாரித்த டோனி ஜோர்டன் என்பவர் தயாரித்துள்ள 'The Nativity' என்ற இத்தொடரை, Coky Giedroyc என்பவர் இயக்கியுள்ளார்.

இத்தொடரில் மரியா, யோசேப்பு இவர்களிடையே காணப்படும் அன்பு, அவர்கள் சந்திக்கும் சவால்கள் ஆகியவை அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் இத்தொடரில் வானில் காணப்படும் அறிகுறிகளை கணிக்கும் மூன்று ஞானிகள், மற்றும் தினமும் உழைக்கும் ஆயர்கள் ஆகியோர் இறைவனைத் தேடும் வழிகள் கூறப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியைக் குறித்து மேலும் விவரங்கள் அறிவதற்கு http://www.nativitydrama.info என்ற இணையதளத்தை நாடலாம் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.