2010-12-11 15:24:35

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
அந்நாள்களில், பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்(இறைவாக்கினர் எசாயா 35: 1-2)
கொஞ்சம் நிறுத்துங்கள்... தயவு செய்து கட்டுக்கடங்காது செல்லும் உங்கள் கற்பனைக்குக் கடிவாளம் போடுங்கள்... என்று இறைவாக்கினர் எசாயாவிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தை நிறுத்தத் தோன்றுகிறது. மணலில் கயிறு திரிப்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காற்றில் கயிறு திரிக்க முயன்றிருக்கிறார் இறைவாக்கினர் எசாயா.
நம் திருவழிபாட்டில் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு Gaudete ஞாயிறு, அதாவது, மகிழும் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. எனவே, எசாயாவின் இந்த அற்புதமான கற்பனையுடன் இன்றைய வாசகங்கள் ஆரம்பமாகின்றன.
அற்புதம் இருக்க வேண்டியதுதான். அதற்காக, அபத்தமான கற்பனைகளை அற்புதம் என்று எப்படி சொல்வது? பாலை நிலம் லீலி மலர்களுடன் பூத்துக் குலுங்கும் என்று இயற்கைக்கு முரணானவைகளைக் கூறுவது கொஞ்சம் 'ஓவர்' தானே...

அன்பர்களே, இப்படி நாம் பேசுவதற்கு என்ன காரணம்? எந்த மன நிலை இப்படி நம்மைப் பேச வைக்கிறது என்பதைச் சிந்திப்பது நல்லது. வாழ்வின் எதார்த்தங்களைப் பார்த்துப் பார்த்து, பயந்து, பயந்து அடுத்த அடி எடுத்து வைத்தால் எவ்விதம் அடிபடுவோமோ என்று கணக்குப் பார்க்கும் ‘practical’ சிந்தனை - நடைமுறைக்கு ஏற்றவைகளையே எண்ணிப்பார்க்கும் சிந்தனை - இது போன்ற கேள்விகளை நம்மில் எழுப்புகிறது. இப்படிப்பட்ட கற்பனைகள் உண்மையாகவே நடக்கக் கூடாதா என்று ஆழ்மனதில் ஆசை எழுந்தாலும், நமது ‘practical’நடைமுறை அறிவு, இந்த ஆவலின் மேல் தண்ணீரை, மணலைக் கொட்டி அணைத்து விடுகிறது.

நடைமுறைக்கு ஒத்து வருவதையே நாம் நாள் தோறும் எண்ணி வந்தால்...
நடக்கும் ஒவ்வொன்றுக்கும் காரண, காரியங்களை நாம் அலசி வந்தால்...
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைத்தால்...
செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால்...
உலகில் கணக்குகள் எழுதப்பட்டப் புத்தகங்கள் மட்டுமே நிறைந்திருக்கும். கவிதைகளை, கனவுகளைச் சொல்லும் புத்தகங்கள் இருக்காது. மனித குலத்தில் ஆயிரம் பேர் கணக்கெழுதிய போது, ஓரிருவர் கவிதை எழுதியதால்தான் இவ்வுலகம் இவ்வளவு அழகாக இன்றும் உள்ளது.

கற்பனை செய்து பாருங்கள்... இல்லை, இல்லை, மன்னிக்கவும்... கணக்குப் போட்டுப் பாருங்கள்... கலை வடிவங்கள் ஒன்றுமே இவ்வுலகில் இல்லை என்றால், இவ்வுலகம் எப்படி இருக்கும்? உலகம் இருந்திருக்காது. இவ்வளவு காலம் இந்த உலகம் வாழ்ந்திருக்காது. கவிதை, கனவு, கலை இவைகள் தரும் நம்பிக்கையாலேயே இந்த உலகம் இது நாள் வரை வாழ்ந்திருக்கிறது.
கவிதை சொல்பவர்கள், கனவு காண்பவர்கள் மென்மையானவர்கள்; உலகின் முரட்டுப் போக்கிற்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் என்று தவறான முடிவெடுக்கிறோம். கனவுகள், கவிதைகள் இவைகளும் கனலான மனங்களில் இருந்து உருவாகும்; பிற மனங்களிலும் கனலை உருவாக்கும் என்பதற்கு பாரதி ஓர் எடுத்துக்காட்டு.
நேற்று, டிசம்பர் 11, இந்தக் கவிஞரின் பிறந்தநாளை நினைவு கூர்ந்தோம். வாழ வழியில்லாமல் தான் இருந்தாலும், பல கோடி மக்கள் வாழ நம்பிக்கை வரிகளைச் சொன்ன பாரதி போன்ற கவிஞர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். பாரதி போலவே, தன் வாழ்வில் துன்பங்களைத் தாங்கினாலும், மக்களின் நம்பிக்கைக்கு வழி வகுத்த திருமுழுக்கு யோவானைக் குறித்து இன்றைய நற்செய்தி பேசுகிறது.
இவரைக் குறித்து இன்றைய நற்செய்தியில் இயேசு பேசும் போது, யோவான் வாழ்ந்த கடினமான வாழ்வை நினைவு படுத்துகிறார். இறைவாக்கு உரைக்கும் பலருக்கும் இதே கதிதான் என்பதை விவிலியம் மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்கிறது. இறைவாக்கினர்கள் மெல்லிய ஆடை அணிந்து, மாளிகையில் வாழ்பவர்கள் அல்ல... பாலை நிலத்தில் பாறைகளோடு ஒரு பாறையாய் மாறி, இயற்கையின் கருணைக்கு விடப்பட்டவர்கள் இவர்கள் என்று இயேசு நினைவு படுத்துகிறார்.

மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. என்று இயேசுவால் புகழப்பட்டவர் திருமுழுக்கு யோவான். பாலை நிலத்தில் ஒலித்த அவரது குரலைக் கேட்க மக்கள் ஓடிச் சென்றனர். மக்களை வரவழைத்து, அவர்களுக்கு நம்பிக்கையையும், நற்செய்தியையும் கூறிய யோவான், மதத் தலைவர்களையும் உரோமைய அரசையும் கடுமையாகச் சாடினார். இதனால் கதி கலங்கிய மதத் தலைவர்களும், ஏரோதும் அவரைச் சிறையில் அடைத்தனர். அந்தச் சிறையும், சங்கிலிகளும் யோவானின் உடலைக் கட்டிப் போட்டன. ஆனால் அவரது மனதில் கொழுந்து விட்ட கனலை அடக்க முடியவில்லை.
யோவானின் உடல் சிறையில் அடைபட்டிருந்தாலும், அவர் மனம் தனது மக்களின் விடுதலையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. அந்த விடுதலை இயேசுவின் வழியே வருமா என்ற கேள்வியை ஏக்கத்துடன் கேட்கிறார் இன்றைய நற்செய்தியில்: வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?”

இந்தக் கேள்வியும், இதற்கு இயேசு தந்த பதிலும் இரு வேறு கண்ணோட்டங்களை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. முதலில் யோவானின் கண்ணோட்டம்: தான் சிறையில் அடைக்கப்பட்டதும், தனக்குப் பின்னர் இயேசு, அதாவது, தான் சுட்டிக்காட்டிய உலகின் செம்மறி, முழு வீச்சில் தான் செய்துவந்த பணியில் இறங்கியிருப்பார்... மதத் தலைவர்களையும், உரோமைய அரசையும் இந்நேரம் கதிகலங்கச் செய்திருப்பார் என்பது யோவானின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அவரது எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடைகிறது. எந்தப் புரட்சியும் நடக்கவில்லை. தான் ஒருவேளை தவறானவரைச் சுட்டிக்காட்டி விட்டோமோ என்று யோவான் கலக்கம் கொள்கிறார். தம் சீடர்கள் வழியே இயேசுவிடமே தன் கலக்கத்தை வெளிப்படுத்துகிறார்.
தன் எதிர்பார்ப்புகளை ஏமாற்றிவிட்ட ஒருவரைப் பற்றி ஊரெல்லாம் சொல்லி சலித்துக் கொள்வதை விட, ஏமாற்றிய அவரிடமே அதைப் பற்றி சொல்வதற்கு தனிப்பட்ட துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் யோவானிடம் ஏகப்பட்ட அளவு இருந்தது. வெட்டு ஒன்று துண்டு இரண்டாக எழுகிறது அவரது கேள்வி: தெளிவாகச் சொல்லுங்கள்... வேறு யாரையாவது நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா?

யோவானின் எதிர்பார்ப்புகளும், தனது கண்ணோட்டம், பணி வாழ்வு இவைகளும் வேறுபட்டவை என்பதைச் சொல்ல இயேசுவும் தயங்கவில்லை. யோவான் எதிர்பார்த்த புரட்சி, ஆள்பவர்களை விரட்டி அடித்து, ஆட்சியைப் பிடித்து, மக்கள் வாழ்வை முன்னேற்றுவது என்ற வரிசையில் அமைந்திருந்தது.
இயேசுவின் புரட்சி இதற்கு நேர்மாறான, தலைகீழான புரட்சி. இந்தப் புரட்சி மக்கள் வாழ்வை முன்னேற்றுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. அதுவும் குறையுள்ள மக்களுக்கு முதலில் நிறைவை வழங்கி, அதன் மூலம் தன் புரட்சியை ஆரம்பிக்கிறார் இயேசு. இந்த புரட்சியைக் குறித்து இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவும் கூறியுள்ளார்:
திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். (எசாயா 35: 4) என்று எசாயா முழங்குகிறார். இப்படி அவர் கூறியதும், இறைவன் எப்படி பழிதீர்ப்பார் என்ற விவரம் அடுத்த வரிகளில் அடங்கியிருக்கும் என்று வாசிக்கத் தொடர்ந்தால், பெருத்த ஏமாற்றம் அங்கு நமக்குக் காத்திருக்கும். பழி தீர்ப்பது என்ற வார்த்தைகளைக் கேட்டதும் நம் மனங்களில் ஓடும் வழக்கமான, குறுகிய எண்ணங்களைக் கொண்டு வாசிப்பதால் வரும் ஏமாற்றம்.

அடுத்த வரிகளில் எசாயா கூறுவது இதுதான்:
அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும். (எசாயா 35: 5-6அ, 10)
பழிதீர்க்கும் இறைவன் இப்படித்தான் செயல் படுவார். இறைவனின் இந்த 'பழிதீர்க்கும் படலத்தை' இயேசு தொடர்கிறார். பழி தீர்ப்பது என்றால், பழிக்குப் பழியைச் செய்வது என்பது ஒரு பொருள். ஆனால், பழி தீர்ப்பது என்றால் பழியை, குறையைத் தீர்ப்பது என்றும் பொருள் கொள்ளலாம் இல்லையா? அப்படி பழியைத் தீர்க்க, பழியைத் துடைக்க வந்தவர் இயேசு.
நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. (மத்தேயு நற்செய்தி 11: 4-5
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது உலக வழக்கில், நடைமுறை வழியில் 'practical' ஆகச் சிந்திப்பவர்களின் பழிதீர்க்கும் மந்திரம். இதற்கு நேர் மாறாக, பழியைத் தீர்க்கும் மந்திரங்களும் வழிகளும் உலகில் உண்டு. கண்களையும், மனதையும் திறந்து இவற்றை நாம் பார்க்கப் பழக வேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

பல மாதங்களுக்கு முன்பு ஒரு முறை சொன்ன ஒரு உன்னதமான உண்மைச் சம்பவத்தை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். இஸ்ரேல் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட Ahmad Khatib என்ற 12 வயது பாலஸ்தீனிய சிறுவனின் உடல் உறுப்புக்கள் அனைத்தையும் இஸ்ரேல் மக்களுக்குத் தானம் தந்த Ishmael, Ablah என்ற ஏழை பாலஸ்தீனிய பெற்றோரின் உண்மைச் சம்பவம் கட்டாயம் உங்கள் மனதில் இன்னும் இடம் பிடித்திருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்த பாலஸ்தீனிய பெற்றோர் உலகோடு ஒத்துப் போகாதவர்கள், நடைமுறைக்கு ஒத்துவராத சிந்தனையுடன் செயல்பட்டவர்கள். குஜராத் கலவரத்தின்போது, இந்து முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் இரத்த தானம் செய்த இளையவர்கள் உலகோடு ஒத்துப்போகாதவர்கள். ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒரு சிலர் இப்படி இருப்பதாலேயே இந்த உலகம் இன்னும் மனிதர்கள் வாழும் உலகமாக இருக்கிறது. அன்புக்கும், நம்பிக்கைக்கும் கணக்குப் பார்க்கும் பலரது நடுவில் கவிதையாக, நல்ல கனவாக வாழும் எசாயா, யோவான், Ishmael, Ablah போன்ற இறைவாக்கினர்கள் தொடர்ந்து நம்மிடையே வாழ வேண்டும் என்று வேண்டுவோம். கணக்குப் பார்க்கும் உலகை விட, நல்ல கனவுகளில், கவிதைகளில் உலகம் வளர வேண்டும் என செபிப்போம்.







All the contents on this site are copyrighted ©.