2010-12-10 15:29:07

எழுபது இலட்சம் வத்திக்கான் புகைப்படங்கள் உயர்ந்த தொழிற்நுட்பத்தைக் கொண்டு மறுபதிவு செய்யப்பட்டு வருகின்றன


டிச.10,2010. திருத்தந்தை 12ம் பத்திநாதர் தொடங்கி ஒவ்வொரு பாப்பிறையோடு மிக நெருங்கிய தொடர்புடைய வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்கள் உட்பட வத்திக்கான் பொது ஆவணக்கூடத்திலுள்ள எழுபது இலட்சத்துக்கு மேற்பட்ட புகைப்படங்கள் உயர்ந்த தொழிற்நுட்பத்தைக் கொண்டு மறுபதிவு செய்யப்பட்டு வருகின்றன.
வத்திக்கான் சார்பு தினத்தாளான லொசெர்வாத்தோரே ரொமானோவின் புகைப்படத் தொகுதிகளை உயர்தர தொழிற்நுட்பத்தில் அமைப்பதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று வத்திக்கான் புகைப்படத் துறைத் தலைவர் அருட்திரு Giuseppe Colombara நிருபர் கூட்டத்தில் அறிவித்தார்.
இத்தாலிய உயர்ந்த தொழிற்நுட்பக் கம்பெனியான Solegenia குழு இப்பணியைச் செய்து வருகிறது என்றும், குறைந்தது ஐந்து ஆண்டுகள் எடுக்கும் இத்திட்டத்திற்கு 30 இலட்சம் முதல் 40 இலட்சம் டாலர் வரைச் செலவாகும் என்றும் அவர் கூறினார்.

ஏறக்குறைய 80 விழுக்காட்டுப் புகைப்படங்கள் வண்ணத்திலும் எஞ்சியுள்ளவை கறுப்பு வெள்ளையிலும் அமைக்கப்படும். 1943ம் ஆண்டில் நாத்சிப் படைகளால் உரோம் சான் லொரென்சோ பகுதி குண்டு வைத்துத் தாக்கப்பட்டவுடன் திருத்தந்தை 12ம் பத்திநாதர் அதை உடனடியாகப் பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் தன்னைச் சுட்ட Ali Agca வை உரோம் சிறையில் சந்தித்தது உட்பட பல முக்கிய புகைப்படங்கள் இத்திட்டத்தில் இடம் பெறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.