2010-12-09 15:17:46

உரோமை மக்களுக்காக திருத்தந்தையின் செபம்


டிச.09, 2010. அன்னை மரியாவுக்கு நாம் அளிக்கக்கூடிய மிகப் பெரும் பரிசு நமது செபங்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதனன்று கொண்டாடப்பட்ட அமலஅன்னையின் திருவிழாவையொட்டி உரோமையிலுள்ள Spagna சதுக்கத்திலிருக்கும் அமல அன்னையின் திரு உருவத்திற்கு மலர்களை அளிக்கும் சடங்கின் போது திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
1854ம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் டிசம்பர் 8ம் தேதி அன்னை மரியா மாசின்றி உருவானவர் என்ற மறையுன்மையை உலகறியச் செய்த நிகழ்வையொட்டி, உரோமையிலுள்ள Spagna சதுக்கத்தில் 1857ம் ஆண்டு 50 அடி உயரமான ஒரு தூணின் மீது அன்னை மரியாவின் திரு உருவம் வைக்கப்பட்டது.
இந்தத் திரு உருவத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 8ம் தேதி மாலையில் திருதந்தையர் சென்று மலர்களை அர்ப்பணிப்பதும், அங்கு கூடியிருக்கும் மக்களோடு செபமாலை, அன்னை மரியின் பிரார்த்தனை ஆகிய செபங்களைத் செய்வதும் வழக்கம்.
இந்த வழக்கத்தின் படி Spagna சதுக்கத்திற்கு இப்புதன் மாலை நான்கு மணி அளவில் சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்குள்ள மக்களுடன் செபித்தபின், தன் செய்தியையும் மக்களுக்கு வழங்கினார்.
அன்னை மரியாவுக்கு நாம் அளிக்கும் சிறந்த பரிசு நமது செபம் என்று கூறிய திருத்தந்தை, அன்னை மரியாவிடம் செபிக்கும் அதே வேளையில் அவர் சொல்வதற்கும் நாம் செவி மடுக்க வேண்டும். மரியா நமக்கு வழங்கும் ஒரே செய்தி இயேசு கிறிஸ்து. எப்படி இயேசு அன்னையின் வாழ்வை முழுவதும் நிறைத்தாரோ, அதே போல் நமது வாழ்வையும் இயேசு நிறைக்க வேண்டும் என்பதை அந்த அன்னை விரும்புகிறார் என்று கூறினார் பாப்பிறை.இந்த நிகழ்வின் இறுதியில் திருத்தந்தை எழுப்பிய செபத்தில், உரோமை நகரை, சிறப்பாக அந்நகரில் உள்ள நோயுற்றோர், இளையோர் மற்றும் குடும்பங்களை அன்னை மரியாவின் பாதுகாவலில் தான் ஒப்படைப்பதாகக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.