2010-12-08 15:39:11

திருத்தந்தையின் மூவேளை செப உரை.


டிச 08, 2010. அன்னை மரியின் அமல உற்பவத் திருவிழாவையொட்டி இத்தாலி நாடும் வத்திக்கானும் விடுமுறையை அனுபவித்த இப்புதனன்று திருத்தந்தையும் தன் வழக்கமான புதன் பொது மறைபோதகத்திற்குப் பதிலாக, உரோம் நகர் புனித இராயப்பர் பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுடன் நண்பகல் மூவேளை ஜெபத்தைச் செபித்து உரையும் வழங்கினார்.

அமல உற்பவ அன்னை திருவிழாவான இன்று இடம்பெறும் மூவேளை ஜெபம் ஒரு சிறப்பு ஒளியைப் பெற்றதாக இருக்கிறது. இன்றைய விழாவின் திருவழிபாட்டு வாசகம், இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த நற்செய்தி வாசகம் , காவல்தூதர் கபிரியேலுக்கும் அன்னைமரிக்கும் இடையேயான உரையாடல் குறித்து எடுத்துரைக்கிறது. 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்ற இறைதூதரின் வார்த்தைகள் அன்னை மரியின் ஆழமான தனித்தன்மையை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன, அதாவது 'அருள் நிறைந்தவள்' என்பதை. அருள் நிறை மரியே என்ற செபத்தை நம் சிறு வயதிலிருந்தே செபிப்பதால் நமக்குப் பழக்கமாகிப்போன இந்தப் பதம், இன்று நாம் கொண்டாடும் மறையுண்மையில் விளக்கம் பெறுகிறது. பெற்றோரின் கருவில் உருவானது முதலே, இறைமகனின் தாயாக இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்ட அன்னை மரியாள், அதற்காகவே ஜென்மப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டாள். இதனால் தான் இறைத்தூதுவரும் அப்பதத்தை பயன்படுத்தி, 'இறைவனின் அன்பாலும், அருளாலும் என்றும் நிரப்பபட்டவர்' என்ற அர்த்தத்தை தருகிறார்.

உள்ளொளி, நம்பிக்கை மற்றும் ஆறுதலின் ஆதாரமே அமல உற்பவ மறையுண்மை. மனிதன் தன் உள்மனதிலும் தன்னைச் சுற்றியுள்ள சூழல்களிலும் காணும் முரண்பாடுகளாலும் சோதனைகளாலும் துன்பங்களை அனுபவிக்கும்போது அன்னை மரி நம் அருகே இருந்து, பாவத்தைவிட அருளும், தீமையைவிட இறை இரக்கமும் வலிமையுடையது என்பதை உரைத்து, அவைகளை எவ்விதம் நன்மையாக மாற்றுவது எனச் சொல்லித் தருகிறாள். நாம் ஒவ்வொரு நாளும் நம் உறவுகளிலும் அன்றாட நிகழ்வுகளிலும் அனுபவிக்கும் தீமைகள், தன்னிலையிலேயே குணப்படுத்த முடியாத இதயத்திலேயே தங்கள் அடிப்படையைக் கொண்டுள்ளன. இறை விருப்பத்திற்கு பணிய மறுத்ததே தீமையின் அடிப்படை ஆதாரம் என்றும், தீயோனின் சோதனைக்கு மனித சுதந்திரம் தன்னைக் கையளித்ததன் வழியே மரணம் தன் ஆதிக்கத்தைக் கொணர்ந்தது எனவும் திரு விவிலியம் எடுத்துரைக்கின்றது. நமக்கான அன்பு மற்றும் வாழ்வின் திட்டத்தில் தவறாத இறைவன், ஒரு நீண்ட கால பொறுமையான, அதேவேளை, ஒப்புரவுப் பாதை வழி ஒரு புதிய நிரந்தர ஒப்பந்தத்தை தன் மகனின் இரத்தம் மூலம் உருவாக்கும் வண்ணம் தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார். அன்னை மரியோ, தன் மகனின் மரணத்தின் வழி பெறும் மீட்பை முதலிலேயே பெற்று, ஜென்மப் பாவத்திலிருந்து காப்பாற்றப்பட்டவராக இருந்தார். ஆகவே தன் பரிசுத்தமான இதயத்துடன் நம்மை நோக்கி 'இயேசுவை நம்புங்கள், அவர் உங்களை மீட்பார்' என உரைக்கிறார், என மூவேளை ஜெப உரை வழங்கிய திருத்தந்தை, இத்திருவிழவையொட்டி, இப்புதன் மாலை, தான் உரோம் நகரின் இஸ்பாஞ்ஞா வளாகத்தின் அன்னை மரி திரு உருவச் சிலைக்கு மாலை மரியாதை அளிக்கச் செல்ல உள்ளதை அறிவித்தார். பாரம்பரியமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் எட்டாம் தேதி இடம்பெறும் இந்நிகழ்வின்போது, திருச்சபை மற்றும் உலகின் அவசரத்தேவைகளை அன்னைமரியின் பரிந்துரைக்கென முன் வைக்க உள்ளதாகவும் கூறிய திருத்தந்தை, இறைவனில் விசுவாசம் கொள்ளவும், அவர் வார்த்தையை விசுவசிக்கவும், தீமையை வெறுத்து நன்மையைத் தேர்வுச் செய்யவும் அன்னை மரி நமக்கு உதவுவாராக என வேண்டினார்.

இறுதியில் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்து ஆசீரையும் அளித்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.