2010-12-08 15:52:35

இங்கிலாந்தில் கிறிஸ்மஸ் பாடல்கள் பாடுவது தடை செய்யப்பட்டு வருவது குறித்து Canterbury பேராயரின் கவலை


டிச.08, 2010. இங்கிலாந்தில் கிறிஸ்மஸ் பாடல்கள் பாடுவது, கிறிஸ்மஸ் நாடகங்கள் நடத்தப்படுவது எனும் பழக்கம் தடை செய்யப்பட்டு வருவது குறித்து தன் கவலையை வெளியிட்டார் Canterbury பேராயர் ரோவன் வில்லியம்ஸ்.
கிறிஸ்தவர்களின் ஒரு முக்கிய காலமான கிறிஸ்மஸ் காலத்தை ஒரு பொதுவான விடுமுறை என்று மக்கள் கொண்டாட பல வழிகளிலும் வற்புறுத்தப்படுகின்றனர் என்று பேராயர் வில்லியம்ஸ் இச்செவ்வாயன்று வழங்கிய ஒரு வானொலி உரையில் கூறினார்.
பிற மதங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் நோக்கத்தாலேயே இவ்வாறான போக்கு வளர்க்கப்படுவதாக கூறுவதை தான் ஏற்க முடியாது என்று கூறிய பேராயர், பிற மதத்தினரும் கிறிஸ்மஸ் பாடல்களையும், கிறிஸ்து பிறப்பின் சம்பவங்களையும் ஆர்வமாய் இரசித்து கேட்கவும், பார்க்கவும் செய்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.உலகை மீட்க வந்த இறையன்பு எவ்வித பாதுகாப்பும் இல்லாத ஒரு குழந்தையாய் பிறந்த செய்தி, அனைத்துலகமும் ஏற்கக் கூடிய ஒரு செய்தி என்று கூறிய பேராயர், கிறிஸ்மஸ் சம்பவத்தை மையப்படுத்தி அண்மையில் வெளியான ஓர் அழகானத் திரைப்படம் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளதென்பதையும் சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.