2010-12-08 15:53:18

Cancunல் பருவநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் கருத்தரங்கில் ஐ.நா. பொதுச்செயலரின் உரை


டிச.08, 2010. உலகின் பருவநிலை மாற்றங்கள் கவலை தரும் வகையில் மாறிவருவதைக் கண்டும் இந்த மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் நாம் ஈடுபடாமல் இருப்பது மிகவும் ஆபத்தான ஒரு நிலை என்று ஐ.நா.வின் பொதுச்செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
மெக்சிகோவின் Cancunல் நவம்பர் 29 முதல் டிசம்பர் 10 இவ்வெள்ளி வரை நடைபெற்று வரும் பருவ நிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் கருத்தரங்கில் இச்செவ்வாயன்று உரையாற்றிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
இந்த உலகையும், அதன் மக்களையும் காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நாம் இங்கு கூடியிருக்கிறோம் என்பதை நினைவு படுத்திய ஐ.நா.பொதுச்செயலர், பருவநிலை மாற்றம் குறித்த ஆபத்தைக் களைய நாம் இன்னும் தேவையான அளவு முயற்சிகள் எடுக்கவில்லை என்று வலியுறுத்தினார்.
இங்கு எடுக்கப்படும் முடிவுகள் மட்டும் இந்த உலகைக் காப்பாற்றப் போவதில்லை என்றும், இந்த முடிவுகளை ஒவ்வொரு நாடும் செயல்படுத்துவதில் காட்டும் அக்கறை, அந்த செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வெளிப்படையான வழிமுறைகள் இவைகளையும் நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் தன் உரையில் கூறினார்.பருவநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகள் வளரும் நாடுகளில் மேற்கொள்ளப்படுவதற்கு 2020ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியடைந்துள்ள நாடுகள் 1000 கோடி டாலர்கள் தொகையை ஒதுக்கினாலே இந்த ஆபத்திலிருந்து நாம் மீள முடியும் என்ற விண்ணப்பத்தையும் முன் வைத்தார் ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூன்.







All the contents on this site are copyrighted ©.