2010-12-07 15:48:00

விவிலியத் தேடல்


RealAudioMP3
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் செல்லிடப் பேசிகளை காதருகே வைத்துக் கொண்டு உலகை மறந்து பேசிக்கொண்டே நடந்தவர்களைப் பார்த்தோம். இன்று காதருகே உள்ள ஒரு சிறு கருவியின் உதவியோடு பலர் பேசிக் கொண்டும், வாகனங்களை ஒட்டிக் கொண்டும் போவதைப் பார்க்கிறோம். தூரத்தில் இருந்து பார்த்தால், இவர்கள் தங்களுக்குள்ளேயே பேசி, சிரித்துக் கொண்டு செல்வது போல் ஒரு கலக்கத்தை உண்டாக்கும் காட்சி இது.
நமது தொடர்பு வழிகள் பல ஆயிரம் மடங்கு முன்னேறி விட்டன. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஓர் அடர்ந்த காட்டின் நடுவே கூடாரம் போட்டு தங்கியிருப்பவரோடும் நாம் இன்று தொடர்பு கொள்ள முடியும். தொலை பேசிகளில் குரல் மட்டுமே கேட்டு வந்த காலம் முடிந்து இன்று ஒருவர் ஒருவரது உருவத்தைப் பார்த்து பேசும் வசதிகள் வந்து விட்டன. இணைய தளத்தில் உள்ள பல்வேறு வசதிகளை கொண்டு முன் பின் தெரியாதவர்களும் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகமாகி வருகிறது.
என்னதான் நாம் பல்வேறு கருவிகள் மூலம் தொடர்பு கொண்டாலும், ஒருவரை ஒருவர் முகமுகமாய்ப் பார்த்துப் பேசுவது போல எந்தத் தொடர்பும் அமையாது. அதுவும் நமக்கு முன் அமர்ந்திருப்பவர் நமக்கு மிகவும் நெருங்கியவர், மனதுக்குப் பிடித்தவர் என்றால், இந்தத் தொடர்பு தரும் நிறைவுக்கு ஈடு இணை கிடையாது. முகமுகமாய்ப் பார்த்து பேசும் இந்த உரையாடலில் வழக்கமாக நல்ல ஆழம் இருக்கும். உண்மையும் இருக்கும். நமக்கு முன் அமர்ந்திருப்பவர் மிகத் திறமையான நடிகராய் இருந்தால், உண்மைகள் மறைக்கப்படலாம். இப்படிப்பட்ட நிறைவைத் தரும் முகமுகமான தொடர்பையே திருப்பாடல் ஆசிரியர் 23ம் திருப்பாடலின் நான்காம் வரியிலிருந்து ஆரம்பிக்கிறார்.
இந்த நான்காம் வரியிலிருந்து அவர் இறைவனிடம் நேரில் பேசுகிறார். அதுவும் சாவின் நிழலும், இருளும் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்கும் அந்த நேரத்தில் இந்த முகமுகமான உறவு ஆரம்பமாகிறது. "நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சமாட்டேன்."

துன்ப நேரத்தில் துணையைத் தேடுவது மனித இயல்பு. நாம் தேடும் துணை நம் துன்பத்தைத் துடைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. அந்தத் துணை நம்மோடு அமர்ந்து, நம் கரங்களைப் பிடித்து, அல்லது நம் தோள்களை ஆதரவாய் அணைத்து அமைதியாய் அமர்ந்திருந்தாலே போதுமானது.
துன்பம் என்று கூறும்போது, உடல் வலி, மன வலி என்று எதுவாக இருந்தாலும், துணை ஒன்று இருக்கும்போது, அந்த வலிகளைத் தாங்கும் வலிமை கூடுகிறது.
உடல் வலியைத் தாங்கும் சக்தியைக் குறித்து ஒரு பல்கலைக் கழக ஆசிரியர் சோதனையொன்று நடத்தினார். பனிக்கட்டிகள் வைக்கப்பட்ட ஒரு சிறு தொட்டிக்குள் வெறும் காலுடன் ஒருவர் எவ்வளவு நேரம் நிற்க முடியும் என்று நேரத்தைக் கணக்கிடும் சோதனை அது. முதலில் ஒவ்வொருவரும் அறையில் தனியே அந்தத் தொட்டியில் நிற்கும் போது, நேரம் கணிக்கப்பட்டது. பின்னர் அதே ஆள் பனிக்கட்டிகள் மீது நிற்கும் போது, அவரது நண்பர் ஒருவர் அந்த அறையில் இருக்க அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது முறை நடத்தப்பட்ட அந்த சோதனையில் பனிக்கட்டியில் நின்றவர்களில் பலர் இரு மடங்கு நேரம் பனிக்கட்டியில் நின்றனர்.
இந்தியாவில், இன்னும் பிற நாடுகளில், பிரசவத்திற்குத் தாய் வீட்டுக்குச் செல்வது, அல்லது தாயை வரவழைப்பது நமது பழக்கம். பிரசவ வலி ஆரம்பமானதும், தாயின் அருகாமை அந்தப் பெண்ணுக்குக் கட்டாயம் தேவை. குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் பெண்ணின் வேதனைகளை வேறு யாராலும் உடல் அளவில் உணர முடியாது. குறைக்கவும் முடியாது. ஆனால், அப்பெண்ணின் கரங்களைப் பற்றியவாறு அவரது தாய் அருகில் நிற்பது அந்த வேதனையைத் தாங்க அசாத்திய சக்தியைத் தருகிறது.

துணை ஒன்று இருந்தால், துன்பங்கள், பயங்கள், கவலைகள் என்று நம்மை எது சூழ்ந்தாலும், அவற்றைத் தாங்கும் வலிமை நமக்குக் கூடுதலாக ஏற்படுகிறது. "நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சமாட்டேன்." என்று திருப்பாடலின் ஆசிரியர் சொன்ன இந்த வரிகளை எத்தனை விதமாக நமது பெற்றோர், உற்றார், நண்பர்களிடம் நாம் சொல்லியிருக்கிறோம். அல்லது சொல்ல எண்ணியிருக்கிறோம்.

வாழ்வில் மிகவும் வேதனை தந்த துன்பங்களைத் தாங்கி, பின்னர் தங்கள் வாழ்வைத் தொடர்ந்துவரும் பலரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "நீங்கள் இந்தத் துன்பத்தைக் கடப்பதற்கு எந்த ஒரு விடயம் உங்களுக்கு அதிகம் உதவியது?" என்பது அந்தக் கேள்வி. ஏறத்தாழ எல்லாரும் சொன்ன ஒரு பதில், நண்பர்கள், உறவுகள், அயலவர்கள் என்பது தான். இவர்களது துணை இல்லையெனில், நம்மைச் சூழ்ந்த துன்பங்கள் ஒருவேளை நம்மை உயிரோடு விழுங்கியிருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் நான் கேட்ட ஒரு கதை - ஒரு உண்மை நிகழ்ச்சி - இது. என் மனதில் பசுமரத்தாணியாய் இன்னும் பதிந்துள்ளது.

கல்லூரியில் முன் பின் தெரியாத இரு இளையோரிடையே உருவான நட்பைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி இது. இவ்விருவரையும் ஜான், டாம் என்று அழைப்போம். ஜான் வகுப்புக்கள் முடிந்து ஒரு நாள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவனுக்கு முன் வேறொரு மாணவன் அளவுக்கதிகமாய் கைநிறையப் புத்தகங்களையும், வேறு இரு பைகளையும் சுமந்து கொண்டு போய்க் கொண்டிருந்தான். பாதையில் ஒரு கல் தடுக்கி அம்மாணவன் விழுந்தான். அவன் சுமந்து சென்ற அனைத்துப் பொருட்களும் சிதறி விழுந்தன. உடனே ஜான் அவனிடம் விரைந்து சென்று உதவினான். ஜான் தன்னையே அறிமுகப்படுத்திக் கொண்டான். மற்றொருவன் தன் பெயர் டாம் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். டாமின் சுமைகளில் பாதியை ஜான் எடுத்துக் கொள்ள, இருவரும் பேசிக் கொண்டே டாம் வீட்டுக்கருகே சென்றனர். ஜானை வீட்டுக்குள் அழைத்தான் டாம். இருவரும் பேச ஆரம்பித்தனர். இருவருக்கும் இசையின் மீது உள்ள ஈடுபாட்டை உணர்ந்தனர். அன்று ஆரம்பமான நட்பு, கல்லூரி வாழ்வின் இறுதி வரை நீடித்தது.

கல்லூரி வாழ்வின் இறுதி நாளில் பிரியா விடை நேரத்தில், டாம் மேடையேறினான். "உங்கள் எல்லாருக்கும் தெரியாத ஓர் உண்மையைச் சொல்ல விழைகிறேன். என் உயிர் நண்பன் ஜானுக்குக் கூட தெரியாத ஓர் உண்மை." என்று டாம் ஆரம்பித்ததும், அனைவரும் அமைதியாய் அவன் சொல்வதைக் கேட்டனர்.
"நான் முதலாண்டு படிக்கும் போது, ஒரு நாள் மாலை கல்லூரியில் என் சொந்தமான Shelfலிருந்து அனைத்துப் புத்தகங்களையும், எனக்குரிய எல்லா பொருட்களையும் காலி செய்து எடுத்துக்கொண்டு போனபோது, தடுமாறி எல்லாவற்றையும் கீழே போட்டேன். ஜான் அப்போது எனக்கு உதவி செய்ய வந்தான். நான் தவற விட்டவைகளில் ஒரு சிறு பாட்டிலும் இருந்தது. அதை ஜான் பார்ப்பதற்கு முன் எடுத்து மறைத்து விட்டேன். என் அம்மா எடுக்கும் தூக்க மாத்திரைகள் இருந்த பாட்டில் அது. காலையில் கல்லூரிக்கு வரும்போதே அதை எடுத்து வந்திருந்தேன். அன்று மாலை நான் வீடு திரும்பியதும், அம்மா வீட்டுக்கு வருவதற்கு முன், அந்த தூக்க மாத்திரைகளை எல்லாம் விழுங்கி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்தேன். அந்த நேரத்தில் ஜான் எனக்கு உதவி செய்தது, இன்று இதோ உங்கள் முன் என்னை உயிரோடு நிற்க வைத்துள்ளது. ஜான், அன்று என்னுடன் நீ வந்ததற்கு நன்றி." என்று டாம் சொல்லி முடித்ததும், மாணவர் கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது. வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்தபடி ஜான் மேடைக்கு ஓடினான். ஜான், டாம் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர். அங்கிருந்தவர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர்.
டாம் தவற விட்ட புத்தகங்களை ஜான் எடுத்துக் கொடுத்தது, மிக, மிகச் சாதாரணமான செயல். தவறவிட்ட புத்தகங்களை மட்டுமல்ல. டாமின் வாழ்க்கையையே சேகரித்துக் கொடுத்தான் ஜான். துன்பத்தால் வாழ்வின் எல்லைகளுக்கு விரட்டப்படும் போது, அங்கிருந்து வாழ்வின் மையத்திற்கு நம்மை அழைத்து வரும் உறவுகள் இருந்தால் எந்தத் தீமையையும் நாம் வெல்ல முடியும்.
 "நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சமாட்டேன்." என்ற இந்த வரியில் மற்றொரு முக்கிய வார்த்தை 'என்னோடு'. திருப்பாடலின் ஆசிரியர் இறைவன் தன்னோடு இருப்பதாகக் கூறுகிறார். 'என்னோடு' என்ற சொல்லின் ஆழமானப் பொருளை அடுத்த வாரம் தொடர்ந்து தேடுவோம். கடவுளுக்குத் தரப்படும் பல இலக்கணங்களில் 'எம்மானுவேல்' அதாவது 'கடவுள் நம்மோடு' என்ற இலக்கணம்தான் மிக அழகான இலக்கணம். இந்தத் திருவருகைக் காலத்தில் இந்த இலக்கணம் அடிக்கடி நமக்கு நினைவுபடுத்தப்படும். "நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சமாட்டேன்." என்பதே இன்றைய நாட்களில் நமது செபமாகட்டும்.







All the contents on this site are copyrighted ©.