2010-12-07 15:46:21

டிசம்பர் 08 நாளுமொரு நல்லெண்ணம்


ஜியூன் என்பவர் ஒரு புகழ்பெற்ற வடமொழி அறிஞர். அவரது இளமைக் காலத்தில் புத்தரின் வழிகளைப் பின்பற்ற விழைந்து ஆசிரமத்தில் சேர்ந்தார். தன்னோடு ஆசிரமத்தில் இருந்த அனைவருக்கும் அடிக்கடி புத்தரின் வழிகள் பற்றிய உரைகள் நிகழ்த்தி வந்தார். இதைக் கேள்விப்பட்ட அவரது தாய், அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்:
"மகனே, நீ புத்தரின் எண்ணங்களைத் தொகுத்து வழங்கும் அகராதியாக மாறுவதை விட, அவரது உண்மையான சீடராவதையே நான் அதிகம் விரும்புகிறேன். உயர்ந்ததொரு மலையின் குகையில் தனியே உன்னையே அடைத்துக் கொண்டு தியானத்தில் மூழ்கிவிடு. அதுதான் அறிவொளி பெறுவதற்கு சிறந்த வழி." என்று அந்த அன்னை எழுதியிருந்தார்.
ஆழ்ந்த அமைதி வழியாக நாம் அறிவொளி பெறலாம் என்பதை ஒரு தாயுள்ளம் புரிந்து வைத்திருந்தது. அன்னை மரியாவும் தன்னைச் சுற்றி நடந்தவைகளைத் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார் என்று நற்செய்தி சொல்கிறது. (லூக்கா 2: 51)
 டிசம்பர் 8ம் தேதி அன்னை மரியாவின் திருநாளும், புத்தர் அறிவொளி பெற்ற நாளும் இணைந்து வந்திருப்பது இந்த எண்ணங்களை மனதில் எழுப்புகின்றது.







All the contents on this site are copyrighted ©.