2010-12-06 15:50:09

மனித உயிர்களை மதிப்பதற்கான அர்ப்பணத்தின் சிறந்த காலம் திருவருகைக் காலம்


டிச.06, 2010. கருவில் மனித உயிர் உருவானது முதல் அதன் மாண்பு அங்கீகரிக்கப்படுவதை வலியுறுத்துவதற்கு உகந்த நேரம் இத்திருவருகைக்காலமே என்றார் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறுக்கு முந்தைய நாள் திருத்தந்தை அகில உலக திருச்சபையுடன் இணைந்து ஜெபித்த, மனித வாழ்வுக்கான திருவிழிப்புச் செபம் பற்றிக் குறிப்பிட்ட திருப்பீட செய்தித்துறை இயக்குனர் குரு லொம்பார்தி, இறைவன் குழந்தையாக பிறப்பெடுத்ததை நினைவுகூரும் இத்திருவருகைக்காலம், அப்பிறப்பைக் கொண்டாட நம்மைத் தயாரிக்கும் வகையிலான மனமாற்றம் மற்றும் எதிர்பார்ப்பின் காலம் என்றார்.

ஒக்தாவா தியேஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது இதனைக் குறிப்பிட்ட திருப்பீடப்பேச்சாளர், மனித உயிர் என்பது வெறும் தசையுடன் கூடிய ஒரு பொருளல்ல, எனவே நாம் ஒவ்வொருவரும் கருவில் உருவானது முதல் அன்பு கூரப்பட்டு, மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன தவறு என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

குழந்தைகள் இவ்வுலகில் பிறந்த பின்னரும், கைவிடப்படல், பசி, துன்பங்கள், நோய், உரிமை மீறல்கள், சுரண்டல் போன்றவைகளை அனுபவிக்கிறார்கள் என்ற திருத்தந்தையின் கவலையையும் எடுத்துரைத்த திருப்பீடப்பேச்சாளர், அக்குழந்தைகளை மதித்து, பாதுகாத்து, அன்புசெய்து ஊழியம் செய்யவேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.