2010-12-03 15:37:16

திருப்பீடத்திற்கான Costa Rica நாட்டின் புதிய தூதர் திருத்தந்தையுடன் சந்திப்பு


டிச.03, 2010. Costa Rica நாட்டில் காவல் தூதர்களின் அன்னை மரியா திருவுருவச் சிலை கண்டெடுக்கப்பட்டதன் 375வது ஜுபிலி ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் அந்நாடு அபரிமிதமான கிறிஸ்தவ வாழ்வின் கொடைகளைப் பெற வேண்டுமென வாழ்த்துவதாக உரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Costa Rica நாட்டின் திருப்பீடத்திற்கான புதிய தூதர் Fernando Sanchez Camposஐ இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து, நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்றபோது உரையாற்றிய பாப்பிறை, அந்நாடு ஆர்வமுடன் பெற்ற நற்செய்தி விதைகள் கல்வி நிலையங்களிலும், நல ஆதரவுத் திட்டங்களிலும் மக்கள் முன்னேற்ற அமைப்புகளிலும் முளைத்திருப்பதைக் காண முடிகிறதென்று கூறினார்.
கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை மனித வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற 'San Jose ஒப்பந்தம்' Costa Rica நாட்டில் கையெழுத்திடப்பட்டது என்பதே கருவில் வளரும் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய அந்நாட்டின் பொறுப்பை மீண்டும் வலியுறுத்தி நிற்கிறது என மேலும் உரைத்தார் திருத்தந்தை.சமூகத்திற்கு எதிராகத் தவறு செய்வோர் தண்டனையின்றி தப்புதல், பாலர் தொழில், சமூக அநீதி, போதைப் பொருள் கடத்தல் போன்றவைகள் உறுதியாக நீக்கப்பட வேண்டும் என்பதையும் Costa Ricaவின் திருப்பீடத்திற்கான புதிய தூதர் Campos இடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.