2010-12-02 15:47:51

பாக்தாத் கோவில் வன்முறையில் காயமுற்றவர்களைத் திருத்தந்தை சந்தித்தார்


டிச.02, 2010. பாக்தாத் சிரியரீதி கத்தோலிக்கக் கோவிலில் நடந்த வன்முறையில் காயமுற்றவர்களைத் திருத்தந்தை இப்புதனன்று வத்திக்கானில் சந்தித்தார்.
பாக்தாத் மரியன்னைப் பேராலயத்தில் அக்டோபர் இறுதியில் ஞாயிறு திருப்பலி நேரத்தில் நடந்த தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இவர்களில் 26 பேர் இத்தாலியில் உள்ள ஜெமெல்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மற்றும் 70 பேர் பிரான்சில் சிகிச்சை பெற்று வந்தனர்.
பாக்தாத் தாக்குதலில் காயமுற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் 50 பேரை தன் புதன் பொது மறைபோதகத்திற்குப் பின் திருத்தந்தை சந்தித்துப் பேசினார் என்று வத்திக்கான் பத்திரிகை அலுவலகத்தின் இயக்குனர் அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி கூறினார்.
இந்தத் தாக்குதலில் காயமுற்ற ஒவ்வொருவரோடும் திருத்தந்தை கனிவோடு பேசினார் என்றும் இத்தாக்குதலில் உயிரிழந்தோரின் புகைப்படங்களை அவர்கள் காட்டியதைத் திருத்தந்தை பார்த்தார் என்றும் குரு லோம்பார்தி கூறினார்.பாக்தாத்தில் மட்டுமல்லாது, உலகெங்கும் சிறப்பாக மத்தியக் கிழக்குப் பகுதிகளில் இடையூறுகளைச் சந்திக்கும் கிறிஸ்தவர்கள் மீது திருத்தந்தைக்கு உள்ள அக்கறையை இச்சந்திப்பு உணர்த்துகிறதென்று திருப்பீடத்தின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை லோம்பார்தி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.