2010-12-02 15:48:31

கோவாவில் புனித பிரான்சிஸ் சேவியரின் பேராலயத்தின் அருகில் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் - கத்தோலிக்கர்கள் அதிர்ச்சி


டிச.02, 2010. கோவாவில் புனித பிரான்சிஸ் சேவியரின் அழியா உடல் பாதுகாக்கப்பட்டு வரும் Bom Gesu பேராலயத்தின் அருகில் கோவா அரசு நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவிருப்பது கோவா கத்தோலிக்கர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்தியாவின் பழமை வாய்ந்த கட்டிடங்களைப் பாதுகாக்கும் மத்திய அரசுத் துறையின் கண்காணிப்பில் உள்ள கோவில்களில் கோவாவின் புனித பிரான்சிஸ் சேவியர் திருத்தலமான Bom Gesu கோவிலும் ஒன்று.
மத்திய அரசின் இத்துறையின் கண்காணிப்பில் உள்ள கட்டிடங்களுக்கு அருகே எந்த வித மாற்றங்களும், கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படக் கூடாதெனும் விதி முறைகள் உள்ளபோது, கோவா அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் இத்துறையினர் இதுவரை எந்த எதிர்ப்பும், மறுப்பும் தெரிவிக்காமல் இருப்பது கோவா கத்தோலிக்கர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பழமைச் சின்னங்களை அழிக்கும் இந்த ஒரு முயற்சி, கோவா அரசு கண்மூடித்தனமாகச் செயல்படுவதற்கு ஓர் எடுத்துக்காட்டு எனவும், மத்திய அரசும் இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியதென்றும் கோவா உயர்மறைமாவட்ட சமூகநீதிப் பணிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை Maverick Fernandes கூறினார்.டிசம்பர் 3 இவ்வெள்ளியன்று புனித பிரான்சிஸ் சேவியரின் திருநாள் உலகெங்கும், முக்கயமாக கோவாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.