2010-12-01 15:34:09

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


டிச 01. உரோம் நகர தட்பவெப்ப நிலையைப் பொறுத்த வரையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு புதன்கிழமையும் நடந்துகொண்டிருப்பதுதான் இவ்வாரமும் இடம்பெற்றது. ஆம். இரண்டு நாட்களாக இரவும் பகலும் தொடர்ந்து தூறிக்கொண்டிருந்த வானம், புதன் காலை உள்ளூர் நேரம் 8.30 மணியளவில் மழைத்தூறலை நிறுத்தி அமைதி கண்டது. திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகத்தில் பங்குகொள்ள விரும்பும் விசுவாசிகளுக்கு உதவுவது போல் ஆகாயமே இத்தகைய ஓர் ஏற்பாட்டைச் செய்ததா என்ற சந்தேகத்தை எழுப்புவது போல் அது இருந்தது.

வழக்கம்போல் திருத்தந்தையின் உரைக்குச் செவிமடுக்கும் ஆர்வத்தைக் கொண்ட மக்களால் திருத்தந்தை 6ம் சின்னப்பர் மண்டபம் நிரம்பி வழிய, 13ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 14ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஆங்கிலேயரான மோன நிலை பெண்துறவி நார்விக்கின் ஜூலியன் குறித்து தன் மறை போதகத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

தான் மிகுந்த நோயுற்றிருந்தபோது கண்ட 16 காட்சிகள் குறித்து ஜூலியன் எழுதியுள்ள 'தெய்வீக அன்பின் வெளிப்பாடுகள்' என்ற புத்தகம் வழியாகவே இவர் அதிகம் அதிகமாக அறியப்பட்டார். அவ்வெளிப்பாடுகள் கிறிஸ்துவின் அன்பை மையம் கொண்டதாக உள்ளன. பெண்துறவி ஜூலியனின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், 'அன்பே நம் ஆண்டவரின் அர்த்தம்'. கடவுளால் நாம் அன்பு கூரப்படுகிறோம் அவர் பராமரிப்பில் நாம் பாதுகாக்கப்படுகிறோம் என்ற நிச்சயமான தன்மையை அடிப்படையாகக் கொண்ட நல் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துவதாய் இவரின் எழுத்துக்கள் உள்ளன. தீமையிலிருந்து நன்மையைக் கொணர வல்ல இறைவனின் வல்லமையைக் குறித்துப் பேசும்போது ஜூலியன் கூறுகிறார், 'அனைத்தும் நன்மையாகும், அனைத்து விதமானவைகளும் நன்மையிலேயே முடியும்'. தன் குழந்தைகள் மீது இறைவன் காட்டும் அன்புநிறை அக்கறையை விவரிக்க இறைவாக்கினர் எசாயா பயன்படுத்திய தாயன்பு எனும் உருவகத்தையே ஜூலியனின் மோனநிலை எதிரொலிக்கின்றது. தன் குழந்தைகள் மீதான இறைவனின் அன்பு அவர் மகன் மனுவுரு எடுத்ததிலும், இறை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதிலும் உச்சத்தைக் கண்டது. பெண்துறவி ஜூலியன் தன்னை இவ்வுலகிலிருந்து விலக்கி வாழ்ந்தாலும், ஒவ்வொரு காலத்தின் எண்ணற்ற பெண் துறவிகள் போல் இவரும் ஓர் ஆன்மீக வழிகாட்டியாக அதிகமாக விரும்பப்பட்டார். நம் இதயங்களுக்கும் நம் வழியாக நம் அயலார்களுக்கும் அமைதியையும் மகிழ்வையும் கொணரும் வண்ணம், நம் வாழ்வை மாற்றும் அன்பு என்பது இறைவனே என்ற ஜூலியனின் படிப்பினைகளிலிருந்து நம் வாழ்வு பலன் பெறட்டும்.

இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.