2010-12-01 15:57:27

இந்தியாவில் HIV, எய்ட்ஸ் குறித்த முயற்சிகளில் திருச்சபையின் பங்கு பெருமளவில் உள்ளது


டிச.01, 2010 அகில உலக எய்ட்ஸ் நாளையொட்டி ஐ.நா.வின் UNAIDS என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் HIV, எய்ட்ஸ் குறித்த முயற்சிகள் இந்தியாவில் பெரிதும் பலனளித்துள்ளன என்றும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நோய் புதிதாகத் தாக்குகின்ற ஆபத்து பாதிக்கும் மேல் இந்தியாவில் குறைந்துள்ளதென்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் HIV, எய்ட்ஸ் குறித்த முயற்சிகளில் திருச்சபையின் பங்கு பெருமளவில் உள்ளதென்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மற்றும் இந்நோய் கண்டோரைப் பராமரிப்பதற்கும் இந்தியத் திருச்சபையால் 150க்கும் மேற்பட்ட மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நோயுற்றோரைக் குணமாக்கிய இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்திய கத்தோலிக்கத் திருச்சபை HIV, எய்ட்ஸ் நோயுற்றோரைப் பராமரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறதென்று ஆக்ரா பேராயர் அல்பர்ட் டிசூசா கூறினார்.இந்தியாவில் இந்நோய் கண்டோரைச் சமுதாயம் வெறுத்துத் தள்ளுவது பெரும் வேதனைக்குரிய ஒரு போக்கு என்று கூறிய பேராயர் டிசூசா, இவ்வாறு புறக்கணிக்கப்பட்டோருக்குக் கருணையுடன் சேவையாற்றுவது கத்தோலிக்கத் திருச்சபையின் தனிப்பட்ட ஓர் அழைப்பு என்று சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.