2010-11-30 16:30:30

விவிலியத் தேடல்


RealAudioMP3
23ம் திருப்பாடலின் 23ம் பகுதியை இன்று ஆரம்பிக்கிறோம். இத்திருப்பாடலின் தேடல்கள் இத்தனை பகுதிகளாகத் தொடரும் என்று நான் கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை. நமது தேடல்கள் இவ்விதம் தொடர்வதற்கு நான் மட்டும் பொறுப்பில்லை என்பதை அறிவேன். நமது தேடல் பலருக்கும் பல வழிகளில் உதவியாக இருக்கிறது என்பதோடு, ஒரு சிலர் உங்கள் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மூலம் இன்னும் சில கோணங்களில் சிந்திக்க என்னைத் தூண்டி வருகிறீர்கள். உங்களது ஆர்வம் என்னை இன்னும் அதிகக் கவனத்துடன் இந்தத் தேடலைத் தொடர வைக்கிறது. நாம் இணைந்து மேற்கொள்ளும் இந்தத் தேடலில் ஆயனாம் இறைவன் நம்மைத் தொடர்ந்து வழிநடத்துவார் என்ற நம்பிக்கையுடன், நம் பயணத்தைத் தொடர்வோம்.

இன்றையத் தேடலில் 23ம் திருப்பாடலின் மையப் பகுதிக்கு வந்திருக்கிறோம். "நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்." என்ற வரிதான் இத்திருப்பாடலின் நடுவில் காணப்படும் வரிகள். 23ம் திருப்பாடலின் கருத்து முழுவதையும் ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், அது இந்த வரியாகத் தான் இருக்கும். இந்த வரிக்கு முந்திய வரிகள் இந்தக் கருத்திற்கு முன்னுரையாகவும், இனி வரும் வரிகள் இந்தக் கருத்தின் தொடர்ச்சியாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.
"நீர் என்னோடு இருப்பதால், எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்." என்ற வரியில் இன்னுமொரு சிறப்பும் உண்டு. அதை உணர வேண்டுமெனில், இந்தத் திருப்பாடலின் முதல் நான்கு திருவசனங்களையும் சேர்த்து பார்க்க வேண்டும். இந்த முதல் நான்கு திருவசனங்களையும் நிதானமாகக் கேட்போம், ஒரு சிறு தியானத்தில் இப்போது மூழ்குவோம்.
திருப்பாடல் 23
1 ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்: அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்: தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்: 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்: உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.  
முதல் மூன்று திரு வசனங்களில் திருப்பாடலின் ஆசிரியர் ஆண்டவரை ஒரு ஆயனாகக் குறிப்பிட்டு பேசும் போது, "அவர்" என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

என்று ஆயனின் அற்புத குணங்களை விவரிக்கிறார் ஆசிரியர்.
நான்காம் திருவசனத்திலிருந்து "அவர்" என்ற வார்த்தைக்குப் பதில் "நீர்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

என்று இப்பாடலின் இறுதிவரை இறைவனுடன் நேரடியாகவே பேசுகிறார் ஆசிரியர்.

‘அவர்’ என்று ஆயனைப் பற்றி பேசி வந்தவர், ‘நீர்’ என்று ஆயனிடம் பேச ஆரம்பித்துள்ளது அழகான மாற்றம், நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கும் ஒரு மாற்றம். 'அவர்' என்ற வர்ணனை ஆண்டவரைப் பற்றி பேசுவது. 'நீர்' என்பது ஆண்டவரோடு பேசுவது.
Martin Buber என்ற மேய்யியலாலரைக் குறித்து இரு வாரங்களுக்கு முன் நம் விவிலியத் தேடலில் குறிப்பிட்டோம். பிற மனிதரோடு நாம் கொள்ளும் உறவில் 'நான்-தாங்கள்' என்ற உயர்ந்த உறவும், 'நான்-அது' என்ற தவறான உறவும் வெளிப்படும் என்பதைச் சொன்னவர் Martin Buber. இதே அறிஞர் ஆண்டவனைப் பற்றி பேசுவது, ஆண்டவனை அனுபவிப்பது என்ற இரு நிலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆண்டவனைப் பற்றி பேசுவதை அவர் இறையியல் என்றும் ஆண்டவனை அனுபவிப்பதை மத உணர்வு என்றும் கூறுகிறார்.
இந்த வேறுபாட்டைக் காட்ட அவர் பயன்படுத்தும் எடுத்துக்காட்டு நமது அன்றாட வாழ்விலிருந்து வருவது. உணவு விடுதிக்குச் செல்கிறோம். நமது கையில் உணவு வகைகளின் பட்டியல் 'Menu' தரப்படுகிறது. என்னதான் அழகாகப் படங்களுடன் அங்குள்ள உணவு வகைகளை 'Menu' விவரித்தாலும், அது ஒருவேளை நம் கண்ணுக்கு விருந்தாகுமே தவிர, நாவுக்கு விருந்தாகாது, 'Menu'வை நம்மால் உண்ண முடியாது. அந்தப் பட்டியலில் உள்ள உணவு வகைகளை உண்ணும் போதுதான் நமது பசி அடங்கும்.
ஒரு சில நட்சத்திர உணவு விடுதிகளில் அந்த 'மெனு'வைப் பார்த்ததும், முக்கியமாக அதில் குறிக்கப்பட்டுள்ள விலைகளைக் கண்டதும் பசியெல்லாம் பயந்து ஒளிந்து கொண்ட அனுபவங்களும் நம்மில் பலருக்கு இருக்கும். 'மெனு'வை வாசிப்பதற்கும் அதிலுள்ள உணவை உண்பதற்கும் உள்ள வேறுபாடு பெரிது. அதேபோல், இறைவனைப் பற்றி பேசுவதற்கும், அவரைப் பற்றிய புத்தகங்களை வாசிப்பதற்கும் இறைவனை வாழ்வில் அனுபவிப்பதற்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு.
கடவுளைப் பற்றி 'அவர்', 'இவர்' என்று பேசும்போது அது இறையியல் ஆகிறது. கடவுளிடம் 'நீர்' என்று மரியாதை கலந்த பாசத்தோடும், வேறு சில சமயங்களில் 'நீ' என்று நெருங்கிய உறவோடும், உரிமையோடும் பேசும்போது அது செபமாகிறது. இறைவனை உரிமையோடு, ஆழ்ந்த உறவோடு 'நீ' என்று அழைத்து எழுதப்பட்டுள்ள பக்தி இலக்கியங்கள் பல ஆயிரம் தமிழ் மொழியில் உண்டு என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ளும் ஒரு அம்சம்.

மத உணர்வுகளின் மையம் செப உணர்வு. திருப்பாடல் 23ன் ஆசிரியர் முதல் மூன்று திருவசனங்களில் 'அவர்' என்று ஆயனை விவரித்து விட்டு, நான்காம் வரியிலிருந்து தன் செபத்தை ஆரம்பிக்கிறார். இந்த வேறுபாடு நிகழும் வரியும் முக்கியமான ஒரு வரி... சாவின் நிழலும், இருளும் சூழ்ந்த பள்ளத்தாக்கில் அவர் நடக்கும் போது, 'நீர்' என்று இறைவனிடம் பேச ஆரம்பிக்கிறார்.
துன்பங்கள் நம்மைத் துரத்தும் போது, அல்லது நம்மைச் சூழ்ந்து நெருக்கும் போது, நாம் இறைவனை விட்டு அகன்று விடுகிறோம்; இறைவனை நம் வாழ்விலிருந்து அகற்றி விடுகிறோம். துயரத்தில் ஆழ்ந்தவர்கள் பலர் கோவிலை, மதத்தை, கடவுளை மறந்து, மறுத்து வாழ்கின்றனர் என்பதை நாம் அறிவோம். Harold Kushnerம் அவரது மனைவியும் தங்கள் மகன் Aaronஐ இழந்தபோது, The Compassionate Friends என்ற குழுவில் சேர்ந்து சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கை அவர்கள் கடந்த அனுபவத்தைப் பற்றி பேசினோம். அந்தக் குழுவில் ஒரு சில பெற்றோர் அந்த பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறாமல் தங்கிவிட்டதையும் Kushner சுட்டிக் காட்டினார். இப்படி துன்பத்தில் உறைந்து விட்ட பெற்றோரிடம் தான் ஒரு யூதமத குரு என்பதைச் சொல்ல Kushner தயங்கியதாகக் குறிப்பிடுகிறார். அவர் குரு என்று தெரிந்தால், அது அப்பெற்றோர் கடவுள் மீது கொண்டிருந்த வெறுப்பை, கோபத்தை மேலும் தூண்டி விடும் என்ற காரணத்தால் தன்னை ஒரு குரு என்று அவர் அடையாளப்படுத்தவில்லை என்று கூறுகிறார். நானும் இது போன்ற அனுபவத்தை சந்தித்திருக்கிறேன். நான் குரு என்று தெரிந்ததும், துயரத்தில் இருப்பவர்கள் என்னிடம் கேள்விகளை, மிகச் சங்கடமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். நான் பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறேன். அவர்கள் கடவுள் மீது காட்டிய கோபம் என்னையும் பாதித்திருக்கிறது.
ஆனால், ஒரு சில நேரங்களில் இதற்கு நேர் மாறான உணர்வுகளும் வெளியாகியுள்ளன. துன்பத்தில் இருப்பவர்கள் குருவைக் கண்டதும், கடவுளைப் பற்றி அதிகம் பேசி, பல ஆழ்ந்த கருத்துக்களைக் கூறியதையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அந்நேரங்களில் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஆழமான எண்ணங்கள் நான் பயின்ற இறையியல் பாடங்களை விட உன்னதமானவை. இந்தப் பகிர்வுகளால் நான் அதிகம் வளர்ந்திருக்கிறேன். இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கும் கட்டாயம் இருந்திருக்கும். தங்கள் கோபத்தால், கேள்விகளால் நம்மைப் பாதித்தவர்களையும், துன்பத்தின் நடுவிலும் தங்கள் ஆழ்ந்த எண்ணங்களால், விசுவாசத்தால் நம்மை வளர்த்தவர்களையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்த்து, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

“ஆண்டவர் என் ஆயன் எனக்கேதும் குறையில்லை” என்ற முதல் வரியைச் சிந்திக்கும் போது, Brian Sternberg என்ற Pole Vault வீரரைப் பற்றிப் பேசினோம். Pole Vault பயிற்சியில் ஏற்பட்ட ஒரு விபத்தால் அவர் கழுத்துக்குக் கீழ் செயலிழந்து போனார் என்றும், தன் விபத்தைக் குறித்து அவர் பிற விளையாட்டு வீரகளுடன் பகிர்ந்து கொண்ட அந்த சம்பவத்தையும் குறிப்பிட்டோம். அப்போது அவர் சொன்ன வார்த்தைகளை மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்:
“என்னருமை நண்பர்களே, விளையாட்டு வீரர்களே, ஐந்தாண்டுகளுக்கு முன் வரை உங்களில் ஒருவனாக நான் இருந்தேன். புகழின் உச்சியில் இருந்தேன். இன்று, இதோ இந்த நிலையில் இருக்கிறேன். எனக்கு நடந்தது உங்கள் யாருக்கும், இந்த உலகில் எந்த மனிதருக்கும், நடக்கக் கூடாதென்று தினமும் நான் இறைவனை வேண்டுகிறேன். சராசரி மனிதன் செய்யக்கூடிய செயல்கள் எதையும் செய்ய முடியாமல் நான் தினமும் அனுபவிக்கும் அவமானத்தை, சித்ரவதையை நீங்கள் யாரும் அனுபவிக்கக் கூடாதென வேண்டுகிறேன். எனக்கு நடந்தது உங்களில் யாருக்கும் நடக்கக் கூடாது என்பதே என் செபம், என் விருப்பம், என் நம்பிக்கை... ஆனால்...” Brian பேசுவதைக் கொஞ்சம் நிறுத்தினார். அரங்கமே ஆழ்ந்த அமைதியில் அவர் சொல்லப்போவதை இன்னும் உன்னிப்பாகக் கேட்டது. “ஆனால், இந்த வழியாகத் தான் கடவுள் உங்கள் வாழ்வின் மையத்திற்கு வரவேண்டும் என்றால், அப்படியே வரட்டும்.”
Brian சொன்ன அனைத்து வார்த்தைகளும், முக்கியமாக, அவர் சொன்ன அந்த இறுதி வார்த்தைகள் அரங்கத்தில் இருந்த அனைவர் மனதிலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. அவர்கள் விசுவாசத்திற்கு ஒரு சவாலாக இருந்தன. "இந்த வழியாகத் தான் கடவுள் உங்கள் வாழ்வின் மையத்திற்கு வரவேண்டும் என்றால், அப்படியே வரட்டும்."
துன்பங்கள் கடவுளை நம் வாழ்விலிருந்து துரத்திவிடும் அல்லது அவரை வாழ்வின் மையமாக மாற்றி விடும். நமக்காக இப்போது வேண்டுவோம். சிறப்பாக, தங்கள் வாழ்விலிருந்து இறைவனைத் துரத்தி விட்டு, தவித்துக் கொண்டிருக்கும் உள்ளங்களுக்காகச் செபிப்போம். துன்ப நேரத்தில் இறைவா உம்மை நாங்கள் காண முடியாமல் இருள் சூழ்ந்தாலும், நீர் எம்மோடு இருப்பதை உணரச் செய்தருளும். துன்பத்தின் பாரங்களால் மனமும், உடலும் துவண்டு தங்கள் பார்வையை இருளில் இன்னும் அதிகம் புதைத்துக் கொள்ளும் உள்ளங்களை இப்போது உம்மிடம் கொணர்கிறோம், இறைவா. அன்பு ஆயனே, அவர்கள் வாழ்வின் மையத்திற்கு நீர் மீண்டும் வர வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.