2010-11-30 16:29:31

டிசம்பர் 01 நாளுமொரு நல்லெண்ணம்


Rosa Parks – இந்தப் பெயரில் உள்ளதெல்லாம் மென்மையை உணர்த்தும் எண்ணங்கள். ரோசா மலர், பூங்கா என்ற இந்த இரு பெயர்களையும் தாங்கிய ஒரு 42 வயது பெண் புரட்சிக்கு வித்திட்ட வீரப் பெண்மணி. அவர் புரட்சிக்கு வித்திட்ட நாள் டிசம்பர் முதல் தேதி. புரட்சி என்றதும் கொடி பிடித்து, வாளெடுத்து, இரத்தம் சிந்தி நடத்தப்பட்ட புரட்சி என்று கற்பனை செய்ய வேண்டாம்.
1955ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி ரோசா பார்க்ஸ் என்ற கறுப்பினப் பெண் பேருந்தில் தனக்குரிய இடத்தை ஒரு வெள்ளை இனத்தவருக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னது, அமெரிக்காவில் கறுப்பின மக்களை விழித்தெழச் செய்தது. தொடர்ந்தது ஒரு வருடத்திற்கும் மேலான பேருந்து புறக்கணிக்கும் போராட்டம். இனவெறியில் மூழ்கி இருந்த அமெரிக்க சமுதாயம் அதிர்ச்சி அடைந்தது.
இந்தப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தியவர்களில் ஒருவர் மார்டின் லூத்தர் கிங் ஜூனியர். ரோசா பார்க்ஸ் பேருந்தில் தன் இருக்கையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று எடுத்த முடிவுக்கு, தன் மூதாதையர்களின் உறுதியே துணை நின்றதென்று பின்னொரு முறை அவர் நினைவு கூர்ந்தார்.இதுவரை வெள்ளையினத்தவர் மட்டுமே அமர்ந்திருந்த அமெரிக்க அரசுத் தலைவர் இருக்கையில் கருப்பினத்தைச் சேர்ந்த Barack Obama இன்று அமர்ந்திருக்கிறார் என்றால், அவரும் தன் மூதாதையரின் தோள்களில், சிறப்பாக ரோசா பார்க்ஸ், மார்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் தோள்களில் ஏறி அமர்ந்திருக்கிறார் என்று அர்த்தம்.







All the contents on this site are copyrighted ©.