2010-11-29 15:12:16

வழியுண்டு வாழ நினைத்தால்


நவ.29,2010. உலகில் மிகவும் தகுதியானவர்கள் அவர்கள். வாழ்க்கையைச் சவாலாக ஏற்றவர்கள் அவர்கள். இயலாமையை இல்லாமல் செய்தவர்கள் அவர்கள். வாழும் தெய்வங்கள் அவர்கள். சிபாரிசுகள் தேவைப்படாத சிங்கங்கள் அவர்கள். அவர்கள் யார்?

ஆமாம். இவர்கள் யார்? இவர்களுக்குத் “தன்னம்பிக்கை மனிதர்கள்” என்று பெயர் சூட்டலாம். கடந்த வாரத் தமிழ் இதழ் ஒன்றில் கோவை பாட்டு வாத்தியார் திருவாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களது புகைப்படத்தையும் அவர் பற்றிய செய்தியையும் வாசித்த போது என்ன அற்புதமான மனிதர் என்று வியக்க வைத்தது. இவர் பற்றிக் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது. ஆமாங்க, இவர் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இல்லாமல் முழுமை அடையாத உடலுடன் பிறந்தவர். ஆனால், முழுமையான மனிதர், திறமையான கலைஞர். கர்நாடகக் இசைக் கச்சேரி மேடைகளில் எல்லாருக்கும் பரிச்சயமானவர், வாய்ப்பாட்டுக் கலைஞர்களில் மிக முக்கியமானவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும் தன்னம்பிக்கை வகுப்புகளில் தவறாமல் இடம் பிடிக்கும் 'வாழ்நாள் சாதனையாளர்'! இந்தக் கிருஷ்ணமூர்த்தி இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலேயும் இசைக் கச்சேரி நடத்தியிருப்பவர். இவர் இந்தச் சிகரங்களைத் தொடுவதற்குக் காரணம் இவரது மனஉறுதி. இதனை இவர் பத்திரிகையில் விளக்கியிருப்பதைக் கேளுங்கள்.

நான் பிறந்ததிலிருந்தே உடல் அளவில் சிறு குழந்தையாக இருக்கிற என்னுடைய மன உறுதி ஆயிரம் பேருக்குச் சமம். சும்மா பெருமைக்காகச் சொல்லவில்லை. இறைவன் தன் படைப்புகள் அனைத்துக்கும் ஏதாவது ஒரு சிறப்புத் தகுதி வைத்திருப்பான். அது என்ன என்று கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறவர்களை, இந்த உலகம் சாதனையாளர் என்று கொண்டாடுகிறது. அப்படி அவன் எனக்குப் பரிசாகக் கொடுத்தது அபார மன உறுதி. அந்த மன உறுதிதான் எதுக்கும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற வைராக்கியத்தை எனக்குள் உறுதி ஆக்கியது. பள்ளிக்கூடம் போய்ப் படிப்பது சாத்தியம் இல்லை என்று தெரிந்ததால் வீட்டிலிருந்தே அஞ்சல் வழியில் 12-வது முடித்தேன். கன்னத்துக்கும் தோளுக்கும் இடையில் பேனாவைப் பிடித்து நான் தேர்வு எழுதிய போது, எல்லாரும் வியந்து நின்றார்கள். அதே உறுதியோடு ஹோமியோபதி டிப்ளமோ படிப்பு முடித்தேன். எங்கள் குடும்பம் பரம்பரையாகச் சங்கீதத்தில ஊறிய குடும்பம். அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளிடமிருந்து சங்கீதத்தை எனக்குள் இறக்கிக் கொண்டேன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த மீனாட்சியம்மாள் எனக்குச் சங்கீதத்தில் எவ்வளவோ சொல்லிக் கொடுத்தார்கள். என்னுடைய கை, கால்களாக இருந்த இந்த மனிதர்களாலேயும், மனதைரியம் தந்த ஆண்டவனாலும் சுமார் 2,500 மேடைக் கச்சேரிகள் பண்ணி இருக்கிறேன். இந்தியாவில் பல மாநிலங்கள், மலேசியா என்று பல இடங்களுக்கு ஆண்டவன் என்னைத் தன் கையில் தாங்கிக் கொண்டுப் போய்ப் பாடவைத்து இருக்கான். இது எல்லாம் சாத்தியமாவதற்கு என் மனஉறுதி மட்டும்தான் காரணம்.
நேயர்களே, டிசம்பர் 3, உலக மாற்றுத் திறனாளிகள் தினம். இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்தாலும், மனஉறுதி இருந்தால் தெய்வ நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இவர் மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்ல, இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களுடன் பிறந்த பலருக்கும் தன்னம்பிக்கையை ஊட்டி வருகிறார். ஆம். மனபலத்துடன் கடவுள் நம்பிக்கையும் இருந்தால் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றலாம் என்கிறது கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை.

ஒரு பெரியவர் சொல்கிறார் : “கடவுள் நமது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றினால் அவர் மீது பக்தியும் நம்பிக்கையும் அதிகமாகின்றன. அது சற்றுத் தாமதமானால் அவர் நமது `தன்னம்பிக்கையை' அதிகமாக்குகிறார் என்று அர்த்தம்!” என்று. வாழ்க்கையில் கலக்கமும் சோதனையும் நிறைந்த நேரங்களில் அவற்றினின்று உயிர்த்தெழுவதற்கு மனஉறுதியும் தன்னம்பிக்கையுமே காரணமாக அமைகின்றன. தோல்விகள் தடைக்கல்லாய் மாறும் போது அதைத் தன்னம்பிக்கை என்னும் சுத்தியல் கொண்டு தகர்ப்பவனே வாழ்க்கையில் முன்னேறுகிறான். இந்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் கிருஷ்ணமூர்த்தி போன்ற சில அசாதரண மனிதர் பற்றி ஊடகங்கள் வழியாக அறிய வருகிறோம். அவர்களைச் சந்தித்தும் வருகிறோம். தேனி மாவட்டம், சிலமலை கிராமத்துப் ஆட்டுக்கார வளர்மதியும் தனது மனஉறுதியால் உயர்ந்தவராக நமக்குத் தெரிகிறார். தனது எதிர்நீச்சல் வாழ்க்கையை திருமதி வளர்மதி விவரிப்பதைக் கேட்போம்.

''எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லா கஷ்டமும்'னு கேட்கற ஆளில்ல நான். எல்லாரையும் போலத்தான் எனக்கும் வாழ்க்கையில சில சோதனைங்க வந்துச்சு. ஆனா, 'இதுதான் என் விதி'னு சோர்ந்து போகாம, 'ஏதாச்சும் அதிசயம் நடக்காதா'னு காத்துக் கெடக்காம, உழைப்பையும் புத்தியையும் சேர்த்துப் போட்டு வழிகளைத் தேடினேன்... இப்போ எனக்கு விடிஞ்சுருக்கு!''. இப்படிப் பொருள் பொதிந்த அனுபவ வார்த்தைகளை ஒரு நிருபரிடம் சரளமாக உதிர்த்திருக்கிறார் வளர்மதி. ''நாலாவது வரைக்குமே படிச்ச நான், இன்னிக்கு மாசம் பத்தாயிரம்கிட்ட சம்பாதிக்கறேங்கறது, சாதனை இல்லைனாலும், சந்தோஷமான விஷயம்தானேங்க..?! மாசம் நாப்பதனாயிரம் சம்பாதிக்கறவங்களுக்கு நான் ஒரு செய்தியா இருக்கலாம். ஆனா, மாசம் நானூறு ரூவா சம்பாதிக்கறவங்களுக்கு நான் ஒரு நம்பிக்கையா இருப்பேங்க...'' எனது சொந்த ஊரான சிலமலையில எல்லாருமே குடிசைத் தொழிலா கோப்புகளைச் செய்வோம். நானும் செஞ்சேன். எனக்கு கல்யாணமான கொஞ்ச நாள்ல மாமியார் இறந்து போக, 'மருமக வந்த ராசி, மாமியாரைத் தின்னுட்டா'னு வேற என்னை நோகடிச்சாக. எனவே கூட்டுக் குடும்பத்தை விட்டு விலகித் தகர அடைப்பையே வீடா நெனச்சு, வெறுங்கையோட தனிக்குடித்தன வாழ்க்கைய ஆரம்பிச்சோம்''. என் வீட்டுக்காரருக்கு தச்சு வேலைதான். 'இவரை நம்பினா வீட்டுல உலை கொதிக்காது'னு தெரிஞ்சது. மகளிர் சுயஉதவிக் குழுவில உறுப்பினரானேன். இராசிங்காபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில, ஆடு வளர்க்கக் குழுவுக்கு கடன் கொடுத்தாக. துணிஞ்சு 34,000 ரூபாய்க் கடன் வாங்கி, பதினோரு ஆடுகள் வாங்கினேன். ஆட்டுப் புழுக்கையை வித்து அந்தக் காசுல ஆடுகளுக்கு அகத்திக் கீரை வாங்கிப் போட்டேன். தட்டைப்பயறு காலத்திலத் 'தட்டாம் பொட்டு' வாங்கி சாக்குல போட்டு பரணியில சேகரிச்சு வெச்சு, தீவனம் குறையறப்போ அதை மாற்றுத் தீவனமா கொடுத்தேன்''. ''வேற என்னங்க... மனசிருந்தா மார்க்கமிருக்கும்!''

இப்படிச் சொல்லும் வளர்மதி தற்சமயம் குடிசைத் தொழிலாக 'கோப்புகள்' (Files) செய்கிறார்; தையல் வேலைகள் பார்க்கிறார்; கூலிக்கு மாவு அரைத்துக் கொடுக்கிறார்; ஆடுகள் வளர்க்கிறார்; ஐ.ஓ.பி. வங்கியின் “வர்த்தக வசதி சேவை மையப்” பொறுப்பாளராக இருக்கிறார். இவ்வாறு ஐந்து விதமான தொழில்கள் செய்கிறார். இவரது இன்றைய மாத வருமானம் சுமார் பத்தாயிரம் ரூபாய்! தனது மூன்று குழந்தைகளுடன் தலை நிமிர்ந்து தன்னம்பிக்கையுடன் நிற்கிறார்.

“மனிதன் பிறக்கும் பொழுது பெண்ணின் வயிற்றுக்குள் பிறக்கிறான். இறக்கும் பொழுது மண்ணின் வயிற்றுக்குள் மடிந்து போகிறான்”. இந்த வாழ்க்கையில் அவன் எதில் சிறப்புப் பெற்றான் என்பதைப் பொறுத்துத்தான் அவனுடைய வாழ்க்கை வளம் பெறுகிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து, நல்லனவற்றைப் பகுத்தறிந்து சிரமங்களைக் கடந்தவர்கள்தாம் இன்றையச் சாதனையாளர்கள். வெற்றியும் தோல்வியும் உன் செயல்களைப் பொருத்தே அமையும். “காலம் உன்னை வென்றால் நீயோ காலமாகிவிடுவாய். ஆனால் காலத்தை நீ வென்றால் நீயோ (அப்துல்)கலாமாகி விடுவாய், உளிபடாத கல் சிலையானதாகச் சரித்திரம் இல்லை. உழைப்பில்லாத கனவும் நனவானதாக சரித்திரமில்லை. உழைக்கத் தகுதியற்றவன் உலகில் பிழைக்கத் தகுதியற்றவன். தடைகளைப் பார்த்து தயங்கி நிற்காதே. நீ துள்ளி எழுந்தால் உன் முன் தோல்வி தோற்கும் என்கிறார் ஓர் எழுத்தாளர்.
அன்பர்களே, மனஉறுதி பற்றிச் சொல்லும் போது இணையதளத்தில் வாசித்து சிரித்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்குத் தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள்.. ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார் நம்ம அருள்சாமி. உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து போனார். சிக்கீரம் முடிக்க வேண்டும், எளிமையாக வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். முதலில் தொழில்நுட்ப அறிவைச் சோதிக்க வேண்டும் என்று விரும்பினார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் தொழிற்நுட்பம் தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால் இப்படி கேட்டார். “உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.” 2000 பேர் இடத்தைக் காலி செய்தார்கள். நமது அருள்சாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலை! “இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்கப் போறது இல்ல. எதுக்குப் போய்கிட்டு? என்னதான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார். அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.” இன்னொரு 2000 வெளியே கிளம்பியது. அருள்சாமியோ, “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்தக் கேள்வியை கேட்கலாம்.”என்று இருந்து விட்டார். இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”. சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது. ”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், அருள்சாமி. ஐரோப்பிய மொத்தக் கண்டத்திற்கு முழுமையானத் தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்கச் சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்குமெனப் பார்ப்போம் என்று அடுத்தக் கேள்வியை கேட்டார். “உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” செர்போ-க்ரோட், உலகில் அரிதாகப் பேசப்படும் மொழி. இப்பொழுது, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று யூகிக்க முடிகிறதா?
என்னால் முடியும்" என்று நினைப்பது தன்னம்பிக்கை. அடைந்த உயர்வில் இருந்து சறுக்கி விழாமல் இருக்கவும் மேலும் உயரவும் அது தான் ஒரே வழி. "என்னால் மட்டுமே முடியும்" என்று நினைப்பது கர்வம். தனக்கு எதிரான எதையும் சகிக்க முடியாததும், மற்றவர் சாதனையை ரசிக்க முடியாததும் கர்வத்தின் செயல்களே. கர்வம் இருந்தால் வாழ்க்கையில் மேலே உயருவது சந்தேகமே. வீழ்வது கேவலமல்ல, ஆனால் வீழ்ந்தே கிடப்பதுதான் கேவலம். ஒன்பது முறை விழுந்தவனுக்கு இன்னொரு பெயர் உண்டு. அது என்ன? அவன் எட்டு முறை எழுந்தவன் என்று.

மனதை நிமிர்த்தும் பல மந்திரச் சொற்களை வேதநூல்களும் பெரியோரும் சொல்லி உள்ளனர். மனம் துவண்டு தொங்கும் நேரங்களில் அவற்றை வாய்விட்டுச் சொன்னால் மனம் உறுதிபெறும். மனதில் சக்தியும் பெருகும். வெற்றியும் நெருங்கும்.
ஆம், நண்பர்களே, ஒவ்வொரு நாள் காலையிலும் மனஉறுதியுடன் தன்னம்பிக்கையுடன் எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள். இதோ ஒரு மந்திரம்.....
 நாமே நம்பிக்கையின் தேவன், நாமே உங்களது வலிமையும் பாதுகாப்பும். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறந்தாலும் நான் உங்களை மறக்கவே மாட்டேன் என்கிறார் ஆண்டவர்.







All the contents on this site are copyrighted ©.