2010-11-29 14:48:13

பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்களுக்கான திருத்தந்தையின் உரை


நவ 29, 2010. நற்செய்தி அறிவிப்பு என்பது வாழ்வை மாற்றும் கனிகளைக் கொணர்கிறது, அது விசுவாசிகளின் ஒழுக்க ரீதி மற்றும் ஆன்மீக வாழ்வு சாட்சியத்தில் வெளிப்படுகின்றது என இத்திங்களன்று “அட் லிமினா” சந்திப்பையொட்டி திருப்பீடத்தில் தன்னைச் சந்தித்த பிலிப்பீன்ஸ் ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை.

திருத்தந்தையைச் சந்தித்து கலந்துரையாடவும், புனித இராயப்பர் கல்லறையைத் தரிசிக்கவும் ஐந்தாண்டிற்கு ஒருமுறை ஒவ்வொரு நாட்டின் ஆயர்களும் உரோம் நகர் வருவதே “அட் லிமினா” சந்திப்பு என அழைக்கப்படுகிறது.

தற்போது பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தை, கடவுள் மற்றும் மனிதன் குறித்த தெளிவான உண்மைகளை நற்செய்தியானது எடுத்துரைத்து வருவதால், பிலிப்பீன்ஸ் மக்கள் எப்போதும் ஒரு நீதியான சமூக ஒழுங்கமைவை முன்னேற்ற உழைத்து வருகிறார்கள் என்றார். கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை மனித வாழ்வுக்கு ஆதரவு வழங்கப்படவேண்டும், குடும்பம் மற்றும் திருமணத்தின் முறிவுபடா தன்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பவைகளில் தலத்திருச்சபை தன் பங்கை உணர்ந்து செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் பிலிப்பீன்ஸ் ஆயர்களிடம் முன்வைத்தார் பாப்பிறை. பிலிப்பீன்ஸ் நாட்டில் மரணதண்டனைச் சட்டத்தை நீக்குவதற்கான தலத்திருச்சபையின் முயற்சிகளையும் பாராட்டினார் அவர்.

சமூகத்தொடர்புத்துறையில் திருச்சபையின் முக்கிய இடத்தையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை. சமூக மற்றும் பொருளாதாரத்துறைகளில், குறிப்பாக ஏழைகளுக்கான அக்கறையில் தலத்திருச்சபையின் அர்ப்பணத்தையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அதன் பிறரன்புப் பணிகளைப் பாராட்டியதோடு சமூக ஊழல்களுக்கு எதிரான அதன் போராட்ட அர்ப்பணம் தொடர வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.