2010-11-29 14:53:15

பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் இன்னும் திறந்த மனதோடு இஸ்லாமியர்களின் எண்ணங்களுக்குச் செவிமடுக்க முயல வேண்டும் - கர்தினால் Jean-Louis Tauran


நவ.29, 2010. மதங்களுக்கிடையே உரையாடலின் அவசியம் குறித்து வத்திக்கான் அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். பல்சமய உரையாடலுக்கான திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Jean-Louis Tauran பாகிஸ்தானில் மேற்கொண்டிருந்த மூன்று நாள் பயணத்தின் இறுதியில் இவ்வாறு கூறினார்.

பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் கத்தோலிக்க ஆயர்கள், துறவுசபைத் தலைவர்களைச் சந்தித்து பேசிய கர்தினால் Tauran, தோமினிக்கன் துறவியரால் லாகூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒர் அமைதி மையத்தையும் இஞ்ஞாயிறன்று திறந்து வைத்தார்.

பாகிஸ்தானில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் மத்தியிலும் கிறிஸ்தவர்கள் வாழும் விசுவாச வாழ்வைக் கண்டு தான் வியப்பதாகக் கூறிய கர்தினால், பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் இன்னும் திறந்த மனதோடு இஸ்லாமியர்களின் எண்ணங்களுக்குச் செவிமடுக்க முயல வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்.

கர்தினால் Tauranன் பயணம் பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளதென்றும், வத்திக்கான் அதிகாரி பாகிஸ்தானின் அரசுத் தலைவரையும், பிற அதிகாரிகளையும் சந்தித்ததால், பாகிஸ்தான் அரசும் கிறிஸ்தவர்களின் பிரச்சனைகளைக் கேட்பதற்கு தயாராக உள்ளதைத் தான் காண முடிகிறதென்றும் பாகிஸ்தானுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Adolfo Tito Yllana கூறினார்.








All the contents on this site are copyrighted ©.