2010-11-28 12:25:45

நவம்பர் 29, நாளுமொரு நல்லெண்ணம்


Zankai என்ற வீரன் ஒரு தளபதியிடம் பயிற்சி பெற்றுவந்தார். அத்தளபதியின் மனைவி மேல் காதல் கொண்டு, தளபதியைக் கொன்றார். தலைமறைவாய் வாழ்ந்தார். தனது குற்றத்திற்குப் பரிகாரமாக ஏதாவது நல்லது செய்ய எண்ணினார். அவர் வாழ்ந்த பகுதியில், செங்குத்தான ஒரு மலையைக் குறுகலான பாதை வழியே மக்கள் கடக்க வேண்டியிருந்தது. பலர் அதைக் கடக்கும்போது, தவறி விழுந்து இறந்தனர். அம்மலையைக் கடக்க ஒரு சுரங்கப் பாதையை Zankai தோண்ட ஆரம்பித்தார். 30 ஆண்டுகள் தொடர்ந்து இப்பணியைச் செய்து வந்தார்.
Zankaiயால் கொலையுண்ட தளபதியின் மகன் Zankai இருந்த இடத்தைக் கண்டுபிடித்து, அவரைக் கொல்ல வந்தான். Zankai அவ்விளைஞனிடம், "உன் கையால் இறப்பதற்கு நான் தயார். ஆனால், இறக்கும் முன் நான் செய்துவரும் பணியை முடித்து விடுகிறேன். அதுவரைக் காத்திரு." என்று கேட்டுக் கொண்டார். இளைஞனும் சம்மதித்தான். காத்திருக்கும் காலம் நீண்டுகொண்டே போனதால், அவ்விளைஞனும் Zankaiயுடன் குகை தோண்டும் பணியில் ஈடுபட்டான். இரு ஆண்டுகள் சென்று குகை தோண்டும் பணி முடிந்தது. அவ்வழியே சென்ற மக்கள் அனைவரும், Zankai யையும், அவரைக் கொல்ல வந்த தளபதியின் மகனையும் வாழ்த்தியபடியே குகையைக் கடந்து சென்றனர். Zankai இளைஞனிடம், "என் பணி முடிந்து விட்டது. இப்போது என் உயிரை நீ எடுத்துச் செல்லலாம்." என்றார். இளைஞன் அவர் காலடியில் விழுந்து, "என் ஆசானின் உயிரை நான் எப்படி எடுக்க முடியும்?" என்று கண்ணீர் மல்கக் கூறினான்.
 CNN செய்தி நிறுவனம் அண்மையில் உலகின் தலை சிறந்த பத்து Heroக்களைப் பெருமைப்படுத்தியது. அவர்களில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த Narayanan Krishnan என்பதை நாம் முன்பே வத்திக்கான் வானொலியில் அறிமுகப்படுத்தினோம். இந்த Heroக்களில் மற்றொருவர் கம்போடியாவைச் சேர்ந்த Aki Ra என்ற இளைஞர். இவரும் இவரது நண்பர்களும் கம்போடியாவில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளைக் கடந்த சில ஆண்டுகளாக செயலிழக்கச் செய்து வருகின்றனர். இதுவரை 50,000 வெடிகளுக்கு மேல் செயலிழக்கச் செய்துள்ளனர். நிலக்கண்ணி வெடிகளால் உடல் உறுப்புக்களை இழந்துள்ள பல சிறுவர்களுக்கு, இளையோருக்கு மறுவாழ்வும் கொடுத்து வருகின்றனர். Aki Ra சிறுவனாய் இருந்தபோது, கம்போடிய இராணுவத்தில் சேர்ந்து, பல நூறு நிலக்கண்ணி வெடிகளைப் புதைத்தவர்.







All the contents on this site are copyrighted ©.