2010-11-27 15:44:01

புகைபிடிப்போர் அருகில் இருப்பவர்கள் அப்புகையை சுவாசிப்பதால் உலகில் ஆறு லட்சம் பேர் இறக்கின்றனர்


நவ.27, 2010. புகைபிடிப்போர் அருகில் இருப்பவர்கள் அப்புகையை சுவாசிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் உலகில் ஆறு லட்சம் பேர் இறக்கின்றனர் என்று உலக நல நிறுவனமான WHOன் அறிக்கை கூறுகிறது.

WHO நிறுவனம் முதல் முறையாக உலகம் முழவதும் மேற்கொண்ட இந்த கணிப்பின் முடிவுகளை இவ்வெள்ளியன்று வெளியிட்டதில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் அடங்கியுள்ளது. இவ்வாறு இறப்பதில் குழந்தைகள், அதிலும் பச்சிளம் குழந்தைகள் அதிகம் என்பது உலகின் 192 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளில் ஒன்று.

புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பதால், குழந்தைகள் நிமோனியா, ஆஸ்த்மா போன்ற ஆபத்துக்களையும், மற்றவர்கள் நுரையீரல், இதயம் தொடர்பான பல பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர் என்று இவ்வாய்வுக் குழுவின் தலைவரான Armando Peruga கூறினார்.

புகை பிடிப்பவர்கள் உள்ள வீடுகளில் வளரும் குழந்தைகள் உடல், அறிவு வளர்ச்சியிலும் பாதிக்கப்படுவர் என்று இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.

புகைபிடிப்போருக்கு அருகில் இருப்பதால் ஏற்படும் இந்த பாதிப்பு ஐரோப்பா, ஆசியா ஆகிய பகுதிகளில் அதிகம் என்றும், அமெரிக்கா, மத்திய தரைப் பகுதிகளில் குறைவு என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் இவ்வாறு இறக்கும் ஆறு இலட்சம் பேரில், தென் கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளில் 165000 குழந்தைகளும், 281000 பெண்களும் அடங்குவர் என்று இவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.