2010-11-27 15:38:42

நவம்பர் 28, நாளுமொரு நல்லெண்ணம்


ஒரு நாட்டின் விடுதலை நாள் என்று எதைக் குறிப்பிடுகிறோம்? அந்த நாடு தன்னைத் தானே ஆள்வதற்குரியத் தகுதியை, உரிமையைப் பெறும் நாளை அந்நாட்டின் விடுதலை நாள் என்கிறோம். தன்னைத் தானே ஆள்வது என்பது அனைத்துத் துறைகளிலும் இருந்தால்தான் அந்நாடு உண்மையில் விடுதலைப் பெற்றது என்று சொல்லலாம். இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால், உலகில் ஒரு நாடும் விடுதலை பெறவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
இந்தியா நள்ளிரவில் ஆங்கிலேய அரசிடம் இருந்து அரசியல் விடுதலை பெற்றது. நள்ளிரவில் பெற்றதால் நமது விடுதலை இன்னும் விழித்தெழவில்லை என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வருகிறோம்.
இந்தியாவின் அண்மைய நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், மியான்மார், பங்களாதேஷ், இலங்கை என்ற அனைத்து நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்தியாவின் விடுதலை எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இருந்தாலும், இன்னும் இந்தியத் தாய் விடுதலைப் பயணத்தில் பல காதங்கள் செல்ல வேண்டும்.
நவம்பர் 28ம் தேதியன்று பல நாடுகள் விடுதலை அடைந்ததாக வரலாறு சொல்கிறது. இந்தியாவைக் குறித்து நம் தேசியக்கவி தாகூர் எழுதிய வேண்டுதலை எல்லா நாடுகளுக்கும் பொதுவாக்கி, "இறைவா, விடுதலை விண்ணகத்தில் உலக நாடுகள் அனைத்தையும் விழித்தெழச் செய்வாயாக." என்று வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.